மகளிர் மேம்பாட்டில் சிங்கப்பூருக்கெனத் தனிப்பாதை உள்ளது என்று நிதி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஆண்களும் பெண்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி மகளிர் மேம்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
தீவிரப் பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து பாலினங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தும் அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிப்பதில்லை என்று மக்கள் செயல் கட்சியின் (மசெக) மகளிரணித் தலைவர் திருவாட்டி சிம் கூறினார்.
சிங்கப்பூருக்கு ஏற்புடைய அணுமுகுறை கையாளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆண் ஆதிக்கத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கப்பூரில் பெண்கள் செயல்படுவதில்லை என்றார் அவர்.
சனிக்கிழமை (மார்ச் 8) அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது திருவாட்டி சிம் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூர் வகுத்துள்ள கொள்கைகளின் பெரும்பாலானவை பெண்களுக்கு நலன் அளிப்பதாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அவை பெண்ணியக் கொள்கைகளாக வடிவமைக்கப்படுவதில்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, வீடமைப்பு ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் என்று திருவாட்டி சிம் கூறினார்.
உதாரணத்துக்கு, சிங்கப்பூரில் சாலைகள் பாதுகாப்பானதாக இருப்பதாகவும் பெண்கள் தனியாக வெளியே போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித மேம்பாட்டு அறிக்கை பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டை திருவாட்டி சிம் சுட்டினார்.
அதில் உள்ள 166 நாடுகளில் உலகளாவிய நிலையில் சிங்கப்பூர் 8வது இடம் வகிக்கிறது.
ஆசிய பசிபிக் நிலையில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.
இதன்மூலம் சிங்கப்பூரில் பாலினச் சமத்துவமின்மை மிகக் குறைவாக இருப்பதை இது நிரூபிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கல்வி, வேலையிடப் பங்கேற்பு, வேலை வாய்ப்பு, தலைமைத்துவம் ஆகியவற்றில் மகளிர் பேரளவில் வளர்ச்சி அடைந்திருப்பதாக திருவாட்டி சிம் கூறினார்.