சிம் அட்டை மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதுப் பெண் மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
காவல்துறை புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
தோழி ஒருவரின் நிறுவனத்தின் மூலம் சென்ற மாதமும் இந்த மாதமும் (ஆகஸ்ட்) ‘சிம்பா டெலிகாம்’ நிறுவனத்தில் 500க்கு மேற்பட்ட சிம் அட்டைகளை அப்பெண் பதிவு செய்ததாகக் காவல்துறை கூறியது.
மற்றொரு நண்பரின் உதவியுடன் அதே தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து 600க்கு மேற்பட்ட சிம் அட்டைகளுக்கு அப்பெண் விண்ணப்பித்தார்.
அந்த சிம் அட்டைகள் அனைத்தையும் ஓர் அட்டைக்கு $20 முதல் $25 வரை பெற்றுக்கொண்டு, அறிமுகமில்லாத ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டதாக அப்பெண் கூறியதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
குற்றக் கும்பல்கள், சிங்கப்பூர் சிம் அட்டைகளையும் மின்சிம் அட்டைகளையும் பயன்படுத்தி மோசடிச் செயல்கள், சட்டவிரோதச் செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் காவல்துறை கூறியது.
இத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்பெண்ணுக்கு $10,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

