சட்டவிரோத நோக்கங்களுக்காக சிம் அட்டைகளைப் பதிவுசெய்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 27 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது; 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 2ஆம் தேதிக்கும் மார்ச் 13ஆம் தேதிக்கும் இடையே தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மோசடி எதிர்ப்புத் தளபத்தியத்தின் அதிகாரிகளும் ஏழு காவல்துறைப் பிரிவுகளின் அதிகாரிகளும் அந்த அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
லாப நோக்கங்களுக்காக, பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளை வழங்கியதாகச் சந்தேகிக்கப்பட்டதால், 17 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 37 ஆடவர்களும் 8 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.
16 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் 19 ஆடவர்களும் எட்டுப் பெண்களும் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைக்கும் $10 முதல் $20 வரை அவர்களிடம் வழங்கப்பட்டதை முதற்கட்ட விசாரணைகள் காட்டியதாக அது கூறியது.
வெவ்வேறு சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மொத்தமாக சிம் அட்டைகளை வாங்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் பதிவு செய்யப்பட்ட 30 முதல் 83 வரையிலான சிம் அட்டைகளைச் சட்டவிரோதக் கும்பலின் விநியோகரிடம் ஒப்படைத்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
மோசடிகள், சட்டவிரோதமாகக் கடன்கொடுப்பது உள்ளிட்ட கள்ள நடவடிக்கைகளுக்கான தொடர்புத் தளமாகக் குற்றக் கும்பல்கள் உள்ளூர் சிம் அட்டைகளைப் பயன்படுத்துவதாகக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
லாப நோக்கத்திற்காகக் குற்றச்செயலுக்கு உதவ, பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டையைத் தெரிந்தே மற்றொருவரிடம் வழங்குபவருக்கு $10,000 வரை அபராதம், மூவாண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பற்றி www.police.gov.sg/Advisories/Misuse-of-SIM-Card-Offences எனும் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடியவர்களைப் பற்றிப் புகார்செய்ய, காவல்துறையை 1800-255-0000 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணைய முகவரியில் தகவல் தெரிவிக்கலாம்.
அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று காவல்துறை கூறியது.

