அலைக்கற்றை அலைவரிசைகளைத் தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது சிம்பா

அலைக்கற்றை அலைவரிசைகளைத் தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது சிம்பா

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2026 - 10:24 am

2 mins read

அலைக்கற்றை அலைவரிசைகளை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தியதையும் அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தவறியதையும் சிம்பா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த அக்டோபரில் சுமத்திய தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிறுவனம் இதனை ஒப்புக்கொண்டது.

நவம்பர் 17ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், சிம்பாவின் மூல நிறுவனமான துவாஸ் இத்தகவலை வெளியிட்டது.

சிம்பா நிறுவனத்தின் இயக்குநர் ரிச்சர்ட் டான், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டுப் பதவி விலகுவார் என்றும் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் துவாஸ் கூறியது.

சிம்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்தும் திரு டான் விலகுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

4ஜி சேவைக்கான 2,100 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும், 2023க்கும் 2026க்கும் இடையில் கிட்டத்தட்ட 92 இடங்களில் 2,340 முதல் 2,360 மெகாஹெர்ட்ஸ் வரையிலான அலைக்கற்றையையும் விட்டுவிட்டுப் பல காலகட்டங்களில் அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கவில்லை என துவாஸ் நிறுவனம் தெரிவித்தது.

இச்செயல்கள் சிம்பாவின் மூத்த நிர்வாகத்தின் ஒப்புதலுடன் நடந்ததாகக் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டில் இரு இடங்களில் அனுமதியின்றி 5ஜி கட்டமைப்புச் சாதனங்களைப் பொருத்தியதையும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பிறப்பித்த ஆவணச் சமர்ப்பிப்பு உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தவறியதையும் சிம்பா ஒப்புக்கொண்டது.

அனுமதியின்றி அலைக்கற்றையைப் பயன்படுத்திய சூழலையும், இது மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள தீர்வு நடவடிக்கைகளையும் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாகத் துவாஸ் கூறியது.

இவ்விவகாரம் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாலும் முடிவுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படாததாலும், இவ்வறிவிப்பில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து மேற்கொண்டு கருத்துக் கூறப் போவதில்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

நவம்பர் 16ஆம் தேதிக்குள் இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ஆணையம் கூறியிருந்தது. தவறினால், அதன் அலைக்கற்றை உரிமைகளோ, உரிமத்தின் ஒரு பகுதியோ அல்லது முழு உரிமமும் தற்காலிகமாவோ நிறுத்தப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். அதன் கால அளவு குறைக்கப்படலாம். அல்லது $1 மில்லியன் அல்லது சிங்கப்பூர் ஆண்டு வருவாயில் 10 விழுக்காடு அபராதமாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்