கோத்தா கினபாலு: மலேசியாவின் ஆக உயரமான மலை, சாபாவில் உள்ள கினபாலு மலையாகும்.
2015ஆம் ஆண்டில், ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டபோது சிங்கப்பூரர்களை மீளாத் துயரில் ஆழ்த்திய சம்பவம் நிகழ்ந்தது.
நிலநடுக்கம் காரணமாகப் பத்து சிங்கப்பூரர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 13 வயது நவ்தீப் சிங் ஜர்யாலும் ஒருவர்.
சிங்கப்பூரின் தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் சில மலையேறி வழிகாட்டிகளும் மலையேறிக் கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஏழு மாணவர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டி ஒருவர் ஆகியோர் மாண்டனர்.
இந்நிலையில், மாண்ட நவ்தீப்பின் நிறைவுபெறாத பயணத்தை அவரது சகோதரியான சிம்ரன் ஜர்யால் முடித்து வைத்துள்ளார்.
கினபாலு மலையில் ஏறி அதன் சிகரம் தொட்டார் சிம்ரன்.
தொடர்புடைய செய்திகள்
தமது சகோதரரின் சார்பாக கினபாலு மலையில் ஏறி சிகரத்தை அடைந்ததாக அவர் பெருமிதத்துடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
பயணம் உடல் ரீதியாகச் சவால்மிக்கதாக இருந்ததாக சிம்ரன் பகிர்ந்துகொண்டார்.
அதே சமயம் உணர்ச்சிகள் மேலோங்கி இருக்க, சகோதரர் மீதான பேரளவிலான பாசத்துடன் பயண இலக்கை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“நான் எடுத்த வைத்த ஒவ்வொரு காலடியும் என் சகோதரரை நினைவுப்படுத்தியது. அவரது சிரிப்பு, துணிவு, அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை நினைவுகூர்ந்தேன்,” என்றார் சிம்ரன்.
கினபாலு மலையில் ஏற நவ்தீப் கடுமையாகப் பயிற்சி செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
நவ்தீப்பிற்கும் அவரது நண்பர்களுக்கும் கினபாலு மலையில் ஏறி சிகரம் அடைந்ததாக சிம்ரன் தெரிவித்தார்.
“கினபாலு மலைக் காற்றில் எனது சகோதரரை உணர்ந்தேன். பயணம் சவால்மிக்கதாக இருந்தபோதும் மிகுந்த களைப்பு ஏற்பட்டு பயணத்தை முடிக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டபோதும் நவ்தீப்பின் ஆன்மா என்னுடன் இருந்ததை உணர்ந்தேன். மேலும் என்னுடன் மலை ஏறியவர்கள் எனக்கு ஊக்கமளித்தனர்.
சிம்ரனின் வார்த்தைகள் சோகம், வலிமை ஆகிய இரண்டையும் பிரதிபலித்தன.
துயரமும் அன்பும் அடிக்கடி ஒரே பாதையில் செல்லக்கூடியவை என்று தமது குடும்பத்தாரும் நண்பர்களும் தமக்கு நினைவூட்டியதாகவும் தமக்குத் தேவையான ஆதரவை அளித்ததாகவும் சிம்ரன் கூறினர்.
“கினபாலு மலையில் சிகரத்தை நான் தனியாகச் சென்றடையவில்லை. நவ்தீப்பை எனது மனதில் சுமந்துகொண்டு சாதித்தேன். இந்தச் சாதனையை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். இது நான் எனது அன்புச் சகோதரருக்குச் செலுத்தும் நினைவஞ்சலி. உடல் அளவில் அவர் கினபாலு மலையில் உச்சியை அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நாளும் சூரியன் தோன்றி கினபாலு மலை சிகரத்தில் சூரியக் கதிர்கள் படும்போது அவரது ஆன்மாவும் அதில் கலந்திருக்கும்,” என்று மனதை நெகிழவைக்கும் வண்ணம் பதிவிட்டார் சிம்ரன்.
அவரை நினைத்து ஏங்குவதாகவும் அவர் மீது தாம் வைத்திருக்கும் அன்பும் பாசமும் என்றைக்கும் மறையாது என்றும் சிம்ரன் உணர்ச்சி பொங்க கூறினார்.
கினபாலு மலை உச்சியில் நவ்தீப்பின் படத்துடன் சிம்ரன் இருப்பதைக் காட்டும் படங்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.