உண்மையான வெற்றி என்பது தனிப்பட்ட முயற்சியை மட்டும் சார்ந்ததன்று, மாறாக கூட்டுச் செயல்பாட்டின் மூலமாகவும் உருவாக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற சிண்டாவின் 34வது உன்னத விருது விழாவில் உரையாற்றியபோது, தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் மையமாகக் கொள்ளும் மனநிலைக்குப் பதிலாக ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘நாம் முதல்’ (We First) மனநிலையை இளையர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று வெற்றியின் அர்த்தம் மிகவும் விரிவானதாகவும் ஆழமானதாகவும் மாறியுள்ளது என்று குமாரி இந்திராணி சுட்டிக்காட்டினார்.
“வெற்றி என்பது படிப்பில் மட்டும் முதல் இடம்பெறுவதன்று. ஒரு சிறந்த மனிதராக வளர்வது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, நமது மதிப்புகளுக்கு உண்மையாய் இருப்பது ஆகியவை வெற்றியின் பரிமாணங்கள்,” என்றார் அவர்.
கல்வி அமைச்சின் அண்மைய ஆய்வுப்படி, இந்தியச் சமூக மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், பின்தங்கியோரை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் சமூகத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு மொத்தம் 852 உன்னத விருதுகள் 846 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் அறுவர் தலா இரு விருதுகளைப் பெற்றனர். அதிக எண்ணிக்கையிலான விருது பெற்றவர்களுக்கு இடமளிக்கும் வகையில் விருது விழா இரு அமர்வுகளில் நடைபெற்றது.
கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றில் சிறந்த தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு சிண்டா ஆண்டுதோறும் இவ்விருதை வழங்கி வருகிறது. விருது பெற்றோருக்கு $150 முதல் $500 வரை வெகுமதி வழங்கப்பட்டது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் முதல் உள்ளூர், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள்வரை 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு விருது பெற்றவர்களின் எண்ணிக்கை 12 பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
இம்முறை 50 மாணவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக சிண்டா உன்னத விருது பெற்றனர். மேலும், விளையாட்டுத் துறையில் சிறந்த திறனைக் காட்டி, உலகளாவிய போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த ஐவருக்குச் சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
விழாவின் முதல் அமர்வில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸும் இரண்டாவது அமர்வில் குமாரி இந்திராணியும் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் இதற்கு முன் சிண்டாவின் திட்டங்களில் பங்கேற்றவர்கள்.
இந்தப் பத்து விழுக்காடு சிண்டாவின் பெருமைக்குரிய வெற்றி என்று சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“ஏனெனில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதபோதும், வெற்றிக்கான வழி தெரியாதபோதும் சிண்டா அவர்களுக்கு உதவியது. இப்போது அவர்கள் தங்கள் சமூகத்துக்குத் திரும்பச் சேவை செய்கிறார்கள். இதுவே ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் உண்மையான அடையாளம்,” என்றார் அவர்.
கல்விக்கு அப்பாற்பட்ட துறைகளிலும் மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களை அங்கீகரிப்பது அவசியம் என்பதால்தான் சிண்டா தொடர்ந்து இவ்விருதுகளைத் தொடர்ந்து தொடர்ந்து வழங்கி வருவதாக திரு அன்பரசு குறிப்பிட்டார்.