பல்வேறு செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்து உழைத்துவரும் தொண்டூழியர்களைப் பாராட்டும் விதமாக, தொண்டூழியர் திருவிழாவை நடத்தியது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா).
இந்நிகழ்வில் ஏறத்தாழ 200 தொண்டூழியர்கள், சிண்டா அமைப்புடன் இணைந்து செயல்படும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நவம்பர் 30ஆம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தங்கள் தொண்டூழியத்தின் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றிவரும் சிலரைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், “தொண்டூழியர்களே, சிண்டா அமைப்பின் அடித்தளம். அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அனைவரும் இங்கு கூடியிருப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.
“சிறுவர்களுக்கான ‘புக் விஸர்ட்’, ‘கற்றல் பயணம்’, பண்டிகைக் கால பரிசுப் பையை வழங்குவது, மூத்தோருக்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது என சமூகத்தின் பல தரப்பினருக்கான நிகழ்வுகளை சிண்டா நடத்திவருகிறது. இவை யாவும் தொண்டூழியர்கள் இல்லாமல் சாத்தியமில்லை,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
“பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ள தொண்டூழியர்களைப் பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது. எனினும், சமூகத்தின் இன்னும் பல திட்டங்களைச் செயலாற்ற தொண்டூழியர்கள் தேவை. இளையர்கள் பலரும் முன்வந்து ஈடுபட வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டார் அவர்.
‘புக் விஸர்ட்’ திட்டத்தின் மூலம் பாலர் பள்ளி மாணவர்களுக்குச் சரளமாகப் படிக்க கற்றுத்தருவதுடன், புதுப்புது சொற்களைப் பயன்படுத்தவும் பயிற்சியளித்து வருகிறார் கவின் தேவராஜ், 19.
தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இவர், “சிறுவர்களுடன் பழகுவது இதுவே முதன்முறை. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களுக்குப் பிடித்தமானவற்றைப் பேசுவது எளிதல்ல. அதை இந்தத் திட்டம் மூலம் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார். இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த எட்டாண்டுகளாக சிண்டாவின் பல நிகழ்வுகளில் பங்காற்றிவரும் காமாட்சி ரவிக்குமார் யேஷா, 22, “சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் இருக்கும் சிரமங்கள் குறித்து தொண்டூழியம் செய்வதன் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு என்னால் இயன்றதைச் செய்ய எப்போதும் தயாராக உள்ளேன்,” என்று கூறினார்.
சிண்டாவில் தொடர்ந்து பங்களித்துவரும் மஹேஷ் மோகன், 35, தற்போது தனது மனைவியுடன் இணைந்து தொண்டூழியத்தில் ஈடுபடுகிறார்.
“என் கணவர் சொல்லி, கடந்த சில மாதங்களாக சிண்டாவில் பங்களிக்கிறேன். நான் வாழும் சமூகத்தில் பல்வேறு சிரமங்களுடன் பலர் வாழ்ந்து வருவதைப் பார்ப்பதற்கான வாய்ப்பு தற்போதுதான் கிடைத்துள்ளது. குறிப்பாக மறதிநோய் கொண்ட மூத்தோருடன் பழகும் வாய்ப்பு, நான் என் தாத்தா பாட்டியுடன் செலவிட முடியாத நேரங்களை மீட்டு உருவாக்குவது போல இருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நெகிழ்ச்சி அது,” என்றார் கிருஷ்ணவேணி மகேஷ்.
தொண்டூழியர்களின் அன்புப் பரிமாற்றங்கள், இசை, நடனம், பல்வேறு வகை உணவுகள், மருதாணி உள்ளிட்ட அம்சங்களுடன் திருவிழா களைகட்டியது.

