தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ் 2024’ திட்டம் தொடங்கியது

2 mins read
9778cf6a-b586-4b0a-8b7f-131382638a14
தொடக்க விழாவில் சிண்டா தொண்டூழியர்களுடனும் தலைமை நிர்வாக அதிகாரியுடனும் அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: சிண்டா

சிங்கப்பூரில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ‘புரோஜெக்ட் கிவ் 2024’ திட்டத்தின் தொடக்க விழா அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது.

சிண்டா அமைப்பின் பல்வேறு திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 55 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிண்டா அமைப்பின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் இத்திட்டத்திற்கான நிதி திரட்டு தொடங்கியுள்ளது. இவ்வாண்டு மொத்தம் 84 சமூக அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் சிண்டா செயல்படுத்தவுள்ளது.

இம்மாதம் முழுதும் நடைபெறும் இத்திட்டம், மூத்தோர் வீடுகளைப் பண்டிகைக்காகச் சுத்தம் செய்து தரும் ‘புரோஜெக்ட் ஷைன்’ (Project Shine), மூத்தோர் ஈடுபாடு (Elderly Engagement), ‘புரோஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்ஸ்’ (Project Give Heartlands) உள்ளிட்டவற்றை உள்ளடக்கும்.

கடந்த ஆண்டு நான்கு வட்டாரங்களில் செயல்பட்ட ‘புரோஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்ஸ்’ திட்டம், இவ்வாண்டு எட்டு வட்டாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் 1,600 குடும்பங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் தொடக்க விழாவை வண்ணமயமாக்கும் நோக்கில் சிண்டா அலுவலகத்திலிருந்து பங்கேற்பாளர்கள் 23 விண்டேஜ் கார்களில் (Vintage Cars) இந்திய மரபுடைமை நிலையம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

“சிண்டா வழிநடத்தினாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுத்தும் திட்டம் இது. இருப்பவர்கள் இல்லாதோருக்குக் கொடுத்து மகிழ வேண்டும் எனும் பரந்த மனப்பான்மை பலருக்கு இருப்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்,” என்று சொன்னார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

“சிறப்புத் தேவையுடையோர் அனைவருடனும் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாட வழிசெய்வது அவசியம். அதன் பகுதியாக இரு சிறப்புத் தேவையுள்ளோரும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ளது நிறைவாக இருக்கிறது,” என்றார் ஈராண்டுகளாக இத்திட்டத்தின் பங்காளி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் ‘ஐ-ஸ்னெக்கைச் (I-SNEG - Indian Special Needs Events Group) சேர்ந்த கிளாரன்ஸ் பாலமுருகன், 50.

சிறப்புத் தேவையுள்ள மகனுடன் வசித்துவரும் தாயார் சராசம்மா சாந்தகுமாரி, 82, சிண்டாவின் பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.

“அன்றாடம் சிரமங்களுடன் வாழ்ந்துவரும் மூத்தோரையும் தனிநபர்களையும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒன்றிணைந்த மனநிறைவையும் தரும்,” என்றார் அவர்.

‘புரொஜெக்ட் ஷைன்’ மூலம் பல உதவிகளை சிண்டா தனக்குச் செய்துள்ளதாகவும் இந்நிகழ்வில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்