ஒரே நாளில் ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உதவி வழங்கும் ஆகப்பெரிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா).
இம்முன்னெடுப்பின்கீழ் வாடகை வீடுகள், ஓரறை, ஈரறை, மூவறை வீடுகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தேசிய அளவு அடிப்படையிலான $1,000 தனிநபர் வருமான வரம்பு, சிண்டாவின் $1,600 தனிநபர் வருமான வரம்பு ஆகிய தகுதிவிதிகளுக்குள் அடங்கும் 1001 குடும்பங்களை, ஃபேர்பிரைஸ் குழுமம் வழங்கிய உணவுப் பொருள்கள் சென்றடைந்தன.
கடந்த 2016ஆம் ஆண்டுமுதல், பத்து ஆண்டுகளாக சிண்டா தொடர்ந்து வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவிகளை வழங்கி வருகிறது. அதோடு, அது அக்குடும்பங்களின் தேவைகளையும் கேட்டுவருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 1,100 வீடுகளைச் சென்றடைந்த நிலையில், இவ்வாண்டு ஒரே நாளில் 1,000 வீடுகளுக்கு அந்த உதவிகள் நேரடியாகச் சென்றடைந்தன.
ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற அந்த முன்னெடுப்பில் ஏறத்தாழ 500 தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கழக இந்தியர் நற்பணிச் செயற்குழு, நற்பணிப் பேரவை, ஸ்ரீ நாராயண மிஷன், ஃபேர்பிரைஸ் அறக்கட்டளை, எஸ் வொய் லோஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட 15 பங்காளி நிறுவனங்கள் அந்த முன்னெடுப்பிற்குப் பங்களித்தன.
அங் மோ கியோ குழுத்தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி, தஞ்சோங் பகார் குழுத்தொகுதி உள்ளிட்ட 15 தொகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களை, தொண்டூழியர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துசென்று சந்தித்தனர்.
“பல்வேறு காரணங்களால் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தோர் உதவி நாடுவதில்லை. சிலருக்கு எங்குக் கேட்பதென்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களைச் சென்றடைவதே வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உதவி வழங்குவதன் முக்கிய நோக்கம்,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், அடித்தள அமைப்புகளிடம் பேசி, அவர்களிடமிருந்து தரவுகளைப் பெற்றோம். அதில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து ஆயிரம் வீடுகளைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை சிறிய அளவில் மட்டுமே சென்றடைந்ததைச் சுட்டிய அவர், தேர்ந்தெடுத்த குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் தாமதிக்கும்போது அது விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்புள்ளதை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.
ஒரே நாளில் அதனைச் செய்துமுடிப்பதில் பல சிரமங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்தாலும், குடும்பங்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டபோது, அது சாத்தியம் என நினைத்து முன்னெடுப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இளையர்கள் பலரும் தொண்டூழியம் செய்ய முன்வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு அன்பரசு, “இந்தச் சமூகத்தின் அங்கமாகச் செயல்பட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என இளையர்கள் முன்வருவது, அவர்கள் எதிர்காலத்தில் அடித்தளத் தலைவர்களாகும்போது பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள உதவும்,” என்றும் குறிப்பிட்டார்.
தற்போது வீடுகளுக்குச் சென்று உதவி வழங்கியதுடன், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளதாகச் சொன்ன அவர், அடுத்தகட்டமாக அவர்களைத் தொடர்புகொண்டு உதவவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நற்பணியின் சார்பில் தேவையுள்ள குடும்பங்கள் குறித்த தரவுகளைச் சிண்டாவுக்கு வழங்கினோம். இந்த முன்னெடுப்பில் சிண்டாவுடன் இணைந்துப் பணியாற்றியதில் மகிழ்ச்சி. உதவி தேவைப்படுவோருக்குத் தேடிச் சென்று உதவும் திட்டத்தை மேற்கொள்வது சிறப்பு,” என்றார் நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன்.
இம்முன்னெடுப்பிற்காக, பத்து வாகனங்கள், இருபது தொண்டூழியர்கள் என அணியாகத் திரண்டு உழைத்தனர் ‘டீம் காட்ஸ்டார்’.
இதில் பங்காற்றிய தளவாட நிறுவனத்தைச் சேர்ந்த லக்ஷ்மண், 42, “மனிதவள உதவிகளைப் போலவே போக்குவரத்துச் சேவை உள்ளிட்ட உதவிகளும் இவ்வகை முன்னெடுப்புகளுக்கு அவசியம். அதற்கு உதவ முன்வந்துள்ளோம். சமூகத்திற்கு இயன்ற வகையில் திரும்பிச் செலுத்தும் நோக்கில் இதில் பங்கேற்கிறோம்,” என்றார்.
பரிசுப்பையைப் பெற்றுக்கொண்ட புக்கிட் பாத்தோக் குடியிருப்பளரான ராமநாதன் விஸ்வநாதன், “சிண்டா எனது வீடு தேடி வந்து உதவியதில் மகிழ்ச்சி. இந்திய சமூகத்தினர் ஒருவருக்கொருவர் உதவி நீட்டுவது அவசியம். இயன்றவரை நானும் தொண்டூழியம் செய்ய விரும்புகிறேன்,” என்றார்.

