2024ஆம் ஆண்டின் ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான வழித்தடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஓஏஜி (OAG) எனப்படும் உலகப் பயணத் தரவுத் தளம் அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பத்து வழித்தடங்கள் அடங்கிய பட்டியலில் வெவ்வேறு நகரங்களுடனான சிங்கப்பூர் வழித்தடம் மூன்று தரநிலைகளில் தேர்வாகி உள்ளது. 4வது, 8வது மற்றும் 9வது இடங்களை அது பிடித்து உள்ளது.
பட்டியலின் முலிடத்தை ஹாங்காங்-தைப்பே விமான வழித்தடம் பெற்றுள்ளது.
இவ்வாண்டில் ஆக அதிகமான இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து சென்றதன் அடிப்படையில் சுறுசுறுப்பான விமான வழித்தடங்கள் தேர்ந்து எடுக்கப்படுவதாக ஓஏஜியின் இணையத்தளம் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில், முதலிடத்தில் உள்ள ஹாங்காங்-தைப்பே வழித்தடத்தில் இவ்வாண்டு 6.7 மில்லியன் இருக்கைகளை பயணிகள் பயன்படுத்தினர்.
அதேபோல, 5.46 மில்லியன் இருக்கைகளில் பயணிகள் சென்ற கெய்ரோ-ஜெட்டா விமான வழித்தடம் இரண்டாவது இடத்தையும் 5.41 இருக்கைகள் நிரம்பிய சோல் (இன்சியோன்) - தோக்கியோ (நாரிடா) வழித்தடம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் சாங்கி வழித்தடம் நான்காவது இடத்தைப் பிடித்தது. அந்த வழித்தடத்தில் இவ்வாண்டு சென்ற விமானங்களில் 5.38 மில்லியன் இருக்கைகள் நிரம்பின.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழித்தடத்தின் இருக்கைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பத்து விழுக்காடு அதிகரித்ததாக ஓஏஜி வெளியிட்ட அறிக்கை தெரிவித்து உள்ளது.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் தவிர, ஜகார்த்தா-சிங்கப்பூர் எட்டாவது இடத்தையும் பேங்காக்-சிங்கப்பூர் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜகார்த்தா-சிங்கப்பூர் இருவழித் தடங்களிலும் 4.1 மில்லியன் இருக்கைகள் நிரம்பின. அதேபோல, பேங்காக்-சிங்கப்பூர் இருவழிகளிலும் 4 மில்லியன் இருக்கைகளில் பயணிகள் பயணம் சென்றனர்.
சில அனைத்துலக வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளன. மேலும் சில வழித்தடங்களில் 2019 கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முந்திய நிலையை பயணிகளின் எண்ணிக்கை தொட்டுள்ளது.
குறிப்பாக, மூன்றாவது இடத்தைப் பெற்ற சோல்-தோக்கியோ வழித்தடப் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 விழுக்காடும் பெருந்தொற்றுக்கு முந்திய நிலவரத்தைக் காட்டிலும் 68 விழுக்காடும் அதிகரித்து உள்ளன.

