சிங்கப்பூர் நான்கு போயிங் பி-8ஏ (P-8A) ரக கடல்துறைச் சுற்றுக்காவல் விமானங்களை வாங்கவிருக்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படை, நாட்டின் கடல்துறைப் பாதுகாப்பு ஆற்றல்களைப் புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகளின் முதற்கட்டமாக இது அமைகிறது. தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், அமெரிக்காவின் போர்த் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்தை அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சில் சந்தித்தபோது சிங்கப்பூரின் முடிவைத் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, திரு சான் முதன்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தொடங்கிய அவரின் பயணம், 13ஆம் தேதிவரை நீடிக்கும்.
கடல்துறையில் கூடுதல் விழிப்புடன் இருக்கவும் நீருக்கடியில் ஏற்படக்கூடிய மிரட்டல்களை எதிர்கொள்ளவும் புதிய விமானங்கள் உதவியாக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
தற்போதுள்ள ஃபோக்கர் 50 ரக விமானங்களுக்குப் பதிலாகப் புதிய விமானங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஃபோக்கர் விமானங்கள் 1993ஆம் ஆண்டுமுதல் சேவையில் இருந்துவருகின்றன.
சிங்கப்பூர் வாங்கிய 20 F-35 ரக விமானங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்றார் திரு சான். அடுத்த ஆண்டு (2026) இறுதியிலிருந்து அவற்றை விநியோகிப்பதற்குரிய சரியான பாதையில் பணிகள் நடைபெறுவதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை அமெரிக்காவில் மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நெடுங்காலமாக வாஷிங்டன் அளித்துவரும் ஆதரவுக்கும் திரு. ஹெக்செத்திற்குத் திரு சான் நன்றி தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உன்னதத் தற்காப்பு உறவுகளை அமைச்சர்கள் இருவரும் மறுவுறுதிப்படுத்திக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபாடு காட்டிவருவதைச் சிங்கப்பூர் ஆதரிக்கிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார் அமைச்சர் சான். வட்டாரத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் இரு தரப்பும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டன.
புதிதாக உருவாகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூட்டு ஆய்வு, மேம்பாட்டுப் பணிகள் மூலம் மேலும் அணுக்கமாக ஒத்துழைப்பதைத் திரு சானும் திரு ஹெக்செத்தும் வரவேற்றனர்.