சுற்றுச்சூழல், சமூகம், வேலைகள் எனப் பல்வேறு வழிகளில் கூடுதல் பங்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தனிக் குடும்ப அலுவலகங்களுக்கான சலுகைகளிலும் நிபந்தனைகளிலும் சிங்கப்பூர் நாணய ஆணையம் மாற்றங்கள் செய்கிறது.
2022 ஆண்டிறுதிவரை, வசதிபடைத்த ஒரு குடும்பத்தின் சொத்துகளை மட்டுமே நிர்வகிக்கும் ஏறக்குறைய 1,100 தனி குடும்ப அலுவலகங்களுக்கு ஆணையம் வரிச் சலுகைகள் வழங்கியது. 2021 முடிவில் வரிச் சலுகைகள் பெற்ற 700 குடும்ப அலுவலகங்களைவிட இது அதிகம்.
சிங்கப்பூரில் நிர்வகிக்கப்படுவதற்குப் பேரளவுச் சொத்துகள் இங்கு வருவதாக ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் கூறினார். இந்த வரவு சிங்கப்பூருக்கும் பரந்த நோக்கத்திற்கும் நன்மை பயக்கவேண்டும் என்றார் அவர்.
இனிவரும் காலத்தில், வரிச் சலுகைக்கு விண்ணப்பம் செய்யும் தனிக் குடும்ப அலுவலகங்கள், குடும்ப உறுப்பினர் அல்லாத முதலீட்டுத் தொழிலர் ஒருவரையாவது வேலைக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.
அத்துடன், சிங்கப்பூருக்கும் வட்டாரத்திற்கும் அதிக அர்த்தமுள்ள முறையில் பயனளிக்கும் வகையில் குடும்ப அலுவலகங்களின் மூலதனம் பயன்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக, ஐந்து துறைகளில் மேம்பாடுகள் இருக்கவேண்டும்.
முதலாவதாக, கூட்டிணைவு நிதி அமைப்புகளில் முதலீடு செய்ய குடும்ப அலுவலகங்கள் ஊக்குவிக்கப்படும்.
சிங்கப்பூரிலுள்ள நிதி அமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க ஈடுபாடுள்ள கூட்டிணைவு நிதி அமைப்புகளைத் தகுதிபெறும் முதலீடுகளாகச் சேர்ப்பதற்கு வரையறைகள் விரிவுபடுத்தப்படும். இந்தக் கூட்டிணைவு நிதி அமைப்புகள், பொது நிதியைத் தனியார் துறையின் பங்கேற்புடன் ஒருங்கிணைக்கின்றன.
இவற்றில் முதலீடு செய்யப்படும் சலுகை மூலதனத்திற்கு ஆணையம் அதிக அங்கீகாரம் வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சலுகை மூலதனம் மற்ற முதலீடுகளைவிடக் குறைவான ஆதாயத்தை அல்லது மிகுந்த இடரை ஏற்கிறது. பயனுள்ளதாக இருந்தாலும் அதிக ஆதாய ஈர்ப்பில்லாத பசுமைத் திட்டப்பணிகள், நிலைமாற்றத் திட்டப்பணிகள் போன்றவற்றுக்கு வணிக முதலீடுகள் கிடைப்பதற்கு இது வழிகோலும்.
முதலீடு செய்யப்படும் சலுகை மூலதனத்தின் ஒவ்வொரு வெள்ளியையும் இரண்டு வெள்ளிக்கு நிகரான முதலீடாக ஆணையம் அங்கீகரிக்கும்.
அத்துடன், கூட்டிணைவு நிதி அமைப்புகளுக்கு ஆதரவளிக்க தனிக் குடும்ப அலுவலகங்கள் வழங்கும் மானியங்களுக்கும் அங்கீகாரம் வழங்கும்.
“இந்த மூலதனம் சலுகையானது என்பதால், கூட்டிணைவு நிதி அமைப்புகளுக்கு மானியமாக வழங்கப்படும் ஒவ்வொரு வெள்ளியையும் இரண்டு வெள்ளியாக நாங்கள் அங்கீகரிப்போம்,” என்று புதன்கிழமை நடந்த ஆணையக் கூட்டத்தில் திரு மேனன் கூறினார்.