ஐரோப்பிய மாநிலங்களுடன் சிங்கப்பூர் ஒப்பந்தம்

2 mins read
0b78f072-2c87-4914-aebd-a4aa3126b304
மின்னிலக்க வர்த்தகம் தொடர்பில் சிங்கப்பூரும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தகச் சங்கமும் நான்கு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

சிங்கப்பூரும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தகச் சங்கமும் (இஎஃப்டிஏ) செய்துகொண்ட புதிய ஒப்பந்தம் நிதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் எல்லை தாண்டிய தரவுகளின் பறிமாற்றத்தை மேம்படுத்தவிருக்கிறது.

சிங்கப்பூருக்கும் இஎஃப்டிஏ மாநில மின்னிலக்கச் சந்தைகளுக்கும் இடையிலான இணைப்பை இஎஃப்டிஏ-சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் வலுப்படுத்தும்.

அத்துடன் இருதரப்புக்கும் இடையிலான மின்னிலக்க வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் துடிப்புமிக்க கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு சொன்னது.

ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டேன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகியவை இஎஃப்டிஏ மாநிலங்கள்.

செப்டம்பர் 25ஆம் தேதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் எல்லைகளுக்கு இடையிலான தரவுகள் பாதுகாப்பான முறையிலும் தடங்கல் இன்றியும் வர்த்தகங்கள் பகிர்ந்துகொள்ள முடியும் என்றது அமைச்சு.

இஎஃப்டிஏ-சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம், காகிதமற்ற வர்த்தகம், மின்னிலக்க ரசீது முறை ஆகியவற்றை முன்னிறுத்தும் உயர்தர விதிமுறைகளை ஆதரிக்கும்.

“மின்னிலக்க உலகில் நமது இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் இஎஃப்டிஏ-சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் முக்கிய மைல்கல் என்றார் வர்த்தக உறவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ.

“தடையற்ற, பாதுகாப்பான எல்லைத் தாண்டிய தரவுகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம், மின்னிலக்க வர்த்தகத்தில் வணிகங்களின் பெரிய அளவில் நீக்குப்போக்கை அது தரும். மாறிவரும் பொருளியல் சூழலை எதிர்நோக்கும் வேளையில் ஒரே சிந்தனைகொண்ட பங்காளிகளுடன் ஒத்துழைத்து மின்னிலக்கப் பொருளியலில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றுவது முக்கியம்,” என்றார் திருவாட்டி ஃபூ.

சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தகச் சங்கமும் 2023ஆம் ஆண்டு $30 பில்லியனுக்கும் அதிகமான இருதரப்புச் சேவைகள் வர்த்தகத்தைச் செய்துகொண்டது. அவற்றுள் கிட்டத்தட்ட பாதி மின்னிலக்க முறையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்