தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலிய வெள்ள நிவாரணப் பணியில் உதவும் சிங்கப்பூர் ஆகாயப் படை ஹெலிகாப்டர்கள்

1 mins read
3d70faae-650c-4659-959e-c42d4e26681d
பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அவசரகால அத்தியாவசியப் பொருள்களை அனுப்பி வைக்க இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தற்காப்பு அமைச்சு/ஃபேஸ்புக்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணியில் உதவ சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிவாரணப் பணியில் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படைக்கு உதவியாக அந்த ஹெலிகாப்டர்கள் செயல்படும்.

அந்த சிஎச்-47எஃப் ரக ஹெலிகாப்டர்கள் புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அவசரகால அத்தியாவசியப் பொருள்களை அனுப்பி வைக்க இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அதிகாரிகளின் போக்குவரத்துக்கும் அவை பயன்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் ஆஸ்திரேலிய ராணுவ விமானப் போக்குவரத்துப் பயிற்சி நிலையத்தில் இருப்பவை.

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே மிக நெருங்கிய, நீண்டகாலத் தற்காப்பு உறவு இருப்பதைத் தற்காப்பு அமைச்சு சுட்டியது.

குவீன்ஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை இருவர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 2ஆம் தேதியன்று வெள்ளத்தில் மூழ்கி 63 வயது பெண்மணி மாண்டார்.

அவரை மீட்டுச் சென்ற படகு வெள்ளநீரில் மூழ்கிய மரம் மீது மோதிக் கவிழ்ந்தது.

பிப்ரவரி 4ஆம் தேதியன்று கரும்புத் தோட்டம் ஒன்றில் வெள்ளம் வடிந்ததும் 82 வயது மூதாட்டியின் உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது.

வசிப்பிடங்களிலிருந்து வெளியேறுமாறு ஆயிரக்கணக்கானோருக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்