ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் இடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) அதிகாலை பெர்த் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.
திங்கட்கிழமை இரவு பிரிஸ்பனிலிருந்து கிளம்பிய SQ246 என்ற அவ்விமானம், செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்குச் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது.
இந்நிலையில், அந்த ஏர்பஸ் A350-900 விமானம் ஆஸ்திரேலிய நேரப்படி அதிகாலை 4.58 மணிக்குப் பெர்த்தில் தரையிறங்கியதாக எஸ்ஐஏ நிறுவனம் தெரிவித்தது. அவ்விமானத்தில் 15 பணியாளர்களும் 272 பயணிகளும் இருந்தனர்.
அவ்விமானத்திற்கு ஓர் உதிரி பாகமும் பழுது நீக்க கூடுதல் நேரமும் தேவைப்பட்டன என்று எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்ததாக ‘தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாற்று விமானத்திற்காகக் காத்திருந்தபோது பயணிகளுக்கு உணவும் பானங்களும் வழங்கப்பட்டன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பதிலில் எஸ்ஐ பேச்சாளர் தெரிவித்தார்.
பின்னர் SQ246 விமானம் SQ9224 என எண் மாற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்கு பிரிஸ்பனிலிருந்து புறப்பட்டது. இது இரவு 9.40 மணிக்குச் சிங்கப்பூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இணைப்பு விமானங்களுக்கான மறுபதிவு உட்பட பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். தேவைப்பட்டால், சிங்கப்பூரில் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும்,” என்று அப்பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக எஸ்ஐஏ மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.