தோக்கியோவுக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் திங்கட்கிழமை (அக்டோபர் 28) வானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானி அறையின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் தைப்பேக்கு திருப்பி விடப்பட்டது என்று எஸ்ஐஏ தெரிவித்தது.
249 பயணிகள், 17 விமானச் சிப்பந்திகள் ஆகியோருடன் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.07 மணிக்குப் புறப்பட்ட சேவை SQ636 விமானம், திங்கட்கிழமை காலை 6.20 மணிக்கு ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது.
விமானி அறையின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அது தவ்யுவான் அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமை காலை 4 மணிக்குத் தரையிறங்க வேண்டியதாயிற்று என்று சிஎன்ஏ கேள்விக்கு எஸ்ஐஏயின் செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் தைப்பேயில் தங்குமிடம் வழங்கப்பட்டது.
மாற்று விமானம் அக்டோபர் 28ஆம் தேதி இரவு 8.30 மணிக்குத் தைப்பேயிலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பின்னிரவு 12.30 மணிக்கு தோக்கியோவைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளிடமும் ஏற்பட்ட சிரமத்திற்கு எஸ்ஐஏ மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது. அதன் பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பே அதன் முன்னுரிமை,” என்று அதன் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.