ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்பு தொடர்பில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ).
நிறுவனங்களின் சேவை வழங்கும் விமானங்கள், விமானப் பாதைகள், ஊழியர்கள் ஆகியோரின் செயல்முறை இணைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒப்புதல் குறித்து ஆகஸ்ட் 30ஆம் தேதி எஸ்ஐஏ அறிவித்தது.
விமான நிறுவனங்களின் இணைப்பு இந்த ஆண்டிறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அது குறிப்பிட்டது.
முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இணைப்பிற்குப் பிறகு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா குழுமத்தின் 25.1 விழுக்காட்டுப் பங்குகளைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெற்றிருக்கும்.
அந்தக் குழுமத்தில் அது 20.585 பில்லியன் ரூபாய் (S$320 மில்லியன்) முதலீடு செய்யும் எனக் கூறப்பட்டது.
நிறுவன இணைப்பு நிறைவு பெற்ற பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் S$880 மில்லியன் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த முதலீட்டின் மூலம், இந்திய விமான நிறுவனம் ஒன்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பங்குகளை வகிக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனமாக அது விளங்கும்.
மேலும் உலகின் ஆக வேகமாக வளர்ச்சி காணும் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தியப் போக்குவரத்துச் சந்தை.
உலகளாவிய விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கான விமானச் சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.
மலிவுக் கட்டணச் சேவை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஏர் இந்தியா நிறுவனம், டாட்டா சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
டாட்டா சன்ஸ், எஸ்ஐஏ நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் விஸ்தாரா.
டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின்னர் ஏர் இந்தியா, ஏர் இந்திய எஸ்க்பிரஸ், ஏர் ஏஷியா இந்தியா, விஸ்தாரா என்ற பெயர்களில் நான்கு வெவ்வேறு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது.
விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 விழுக்காட்டுப் பங்குகளையும் டாடா குழுமம் 51 விழுக்காட்டுப் பங்குகளையும் வைத்துள்ளன. 2022 நவம்பரில் ஏர் இந்தியாவையும் விஸ்தாராவையும் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான ஒப்புதல், நிறுவன இணைப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எஸ்ஐஏ குறிப்பிட்டது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.02 மணி நிலவரப்படி அதன் பங்குகளின் விலை 0.5 விழுக்காடு (3 காசு) அதிகரித்து $6.24ஆக இருந்தது.