உலகளாவிய நிலையில் தொழில்நுட்பத் திறனாளர்களைப் பணியமர்த்தும் போட்டியில் சிங்கப்பூர் முன்னிலை வகிப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பத் திறனாளர்களைப் பணியமர்த்தும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்திலிருப்பதாக ஜூலை 9ஆம் தேதி வெளியான ‘கோலியஸ்’ அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் மும்பை, சென்னை ஆகிய நகரங்களும் அதேபோல நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
அறிக்கையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நகரங்களில் இந்தியாவிற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரே நகரம் சிங்கப்பூர்.
வலுவான ஓராண்டு ஆட்சேர்ப்பு விகிதம், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புப் பதிவுகள் ஆகியவற்றால் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான பத்து வேலைகளில் இந்த நகரங்கள் கூடுதலானோரைப் பணியமர்த்தியுள்ளன.
மற்றோர் ஓராண்டு ஆட்சேர்ப்புக் குறியீட்டில் சிங்கப்பூர் உலக அளவில் எட்டாவது நிலையில் உள்ளது. இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில், நீடித்த ஆனால் சற்றே குறைவான குறுகிய-கால ஆட்சேர்ப்பு விகிதத்தை இது பிரதிபலிக்கிறது.
உலக நகரங்கள் பணியமர்த்தும், தொழில்நுட்பத் துறையின் முக்கியமான வேலைகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளும் அடங்கும்.
இந்தப் பட்டியலில் பெய்ஜிங், தோக்கியோ, பெங்களூரு, சோல், சிட்னி போன்ற முன்னணி நகரங்களுடன் சிங்கப்பூரும் தரவரிசைப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த அறிக்கை 200க்கும் மேற்பட்ட உலகச் சந்தைகளை மதிப்பீடு செய்தது. திறனாளர்களைப் பணியமர்த்துதல், புதிய நிறுவனங்களுக்கான மூலதன நிதி வழங்குதல், வலுவான ஊழியர் குறியீடு போன்ற அம்சங்களின் அடிப்படையில் அவை மதிப்பிடப்பட்டன.
உலகளாவிய தொழில்நுட்பத் திறனாளர்கள் சில நகரங்களில் அளவுக்கதிகமாகவும் சிலவற்றில் மிகக் குறைவாகவும் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமான தொழில்நுட்பத் திறனாளர்கள் குவிந்திருப்பதை அது சுட்டியது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ பே ஏரியா, சியாட்டல், நியூயார்க் சிட்டி ஆகியவை உலகளாவிய நிலையில் முன்னணி வகிக்கும் முதல் ஐந்து நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. புத்தாக்கம், தொழில்நுட்ப ஊழியரணியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை இது காட்டுகிறது.
முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவையும் சீனாவையும் சேர்ந்த தலா ஐந்து நகரங்கள் உள்ளன. மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியில் அந்நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதை இது பிரதிபலிப்பதாக அறிக்கை குறிப்பிட்டது.
உலகத் தொழில்நுட்பத் திறனாளர்களில் 36 விழுக்காட்டினர் உலகெங்குமுள்ள 10 நகரங்களில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் அதிகமான தரவு விஞ்ஞானிகள் உள்ளனர். தொழில் நுட்பத்துறை உற்பத்தியில் பெய்ஜிங் முன்னிலையில் உள்ளது. தோக்கியோ, சோல், சிட்னி, சிங்கப்பூர் ஆகியவை உலகத்தரப் புத்தாக்க நடுவங்களாக மலர்கின்றன என்று ‘கோலியஸ்’ அறிக்கை கூறியது.