சிங்கப்பூரும் புருணையும் இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொள்ள மறுவுறுதி

சிங்கப்பூரும் புருணையும் இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொள்ள மறுவுறுதி

2 mins read
15eb9288-c0e5-4257-a171-7b4f10929708
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், (இடப்புறம் நடுவில்) திருமதி லீ, உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங் ஆகியோருடன் புருணை இளவரசர்கள் அப்துல் மாலிக் (வலக்கோடி), அப்துல் மத்தீன். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் இரண்டு நாடுகளுக்கும் உள்ள கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.

சுல்தானின் 80வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஒட்டி திரு லீ புருணை சென்றுள்ளார். சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து மூத்த அமைச்சர் அவற்றில் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 16) இதன் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது.

திரு லீ புதன்கிழமை சுல்தானைச் சந்தித்தார். சிங்கப்பூர்த் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த சிறப்பான உறவுக்கு புருணை சுல்தான் அளித்துவரும் நீண்டகால, வலுவான ஆதரவுக்கு நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இரு நாடுகளும் பாதுகாப்பு உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு அனுசரிக்கின்றன. அதேபோன்று புருணை, சிங்கப்பூர் நாணயங்களை இரு நாடுகளிலும் மாற்றிப் பயன்படுத்த அனுமதிக்கும் ‘நாணயப் பரிமாற்ற உடன்படிக்கையின்’ 60ஆம் ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டில் அனுசரிக்கப்படும். இந்நிலையில், உறவுகளை வலுப்படுத்துவதற்கான மறுவுறுதிமொழி வந்திருப்பதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

மூத்த அமைச்சர் லீ, புருணையின் பட்டத்து இளவரசர் அல்-முஹ்தாதி பில்லாவையும் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள், அதிகாரிகள், இளையர்களுக்கு இடையே தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குரிய வழிகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

புருணையின் பிரதமர் அலுவலக அமைச்சரான இளவரசர் அப்துல் மாலிக், வெளியுறவு அமைச்சரான இளவரசர் அப்துல் மத்தீன் ஆகியோரையும் மற்ற அமைச்சர்களையும் திரு லீ கண்டுபேசினார்.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, விநியோக நடவடிக்கைகளின் மீள்திறன், மக்கள் தொடர்புப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் பற்றி இருதரப்பும் விவாதித்தன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மூத்த அமைச்சர் லீயுடன் திருமதி லீயும் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங்கும் புருணை சென்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்லீ சியன் லூங்புருணைஉறவுஇருதரப்பு உறவுகடப்பாடு