தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடையற்ற வர்த்தகம், முதலீடு தொடர்பில் சிங்கப்பூர் - கனடா பேச்சுவார்த்தை

2 mins read
3380af86-b403-4e63-8eff-0fc1c2ce156d
சிங்கப்பூருக்கு வருகையளித்த (இடது) கனடியப் பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவை இருநாட்டுத் தலைவர்களும் பறைசாற்றியுள்ளனர்.

சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள கனடியப் பிரதமர் திரு மார்க் கார்னியும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சந்தித்துக்கொண்டபோது தடையற்ற வர்த்தகத்தைத் தொடர்வதற்கான கடப்பாட்டையும் மறுவுறுதிப்படுத்தினர்.

திரு கார்னிக்கு இஸ்தானாவில் புதன்கிழமை (அக்டோபர் 29) காலை விருந்து வழங்கப்பட்டது. அப்போது திரு கார்னியும் திரு வோங்கும் பொருளியல், முதலீட்டுத் தொடர்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். தொழில்நுட்பம், எரிசக்தி, இணையப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

தடையற்ற வர்த்தகம், முதலீடுகள் ஆகியவை குறித்த எதிர்காலக் கண்ணோட்டம், பலதரப்பு வர்த்தகம், அனைத்துலகச் சட்டம் ஆகியவை பற்றியும் திரு வோங்கும் திரு கார்னியும் கலந்துரையாடினர்.

முதல் முறையாக சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள கனடிய பிரதமர் திரு கார்னியை வரவேற்பதாகவும் திரு கார்னியை இதற்குமுன்பே தாம் அறிந்திருந்ததாகவும் திரு வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

ஆசியானுடனான பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதுடன் தென்கிழக்கு ஆசிய வட்டார நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ள முயலும் கனடாவின் விருப்பங்களைத் திரு வோங் மெச்சினார்.

“சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள திரு கார்னிக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி. கனடியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் உள்ள வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளையும் கண்டறிய திரு கார்னிக்கு வாய்ப்புக் கிடைத்தது,” என்றார் பிரதமர் வோங்.

கனட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான திரு கார்னி, கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூர் வர்த்தகங்கள் கிட்டத்தட்ட $7.4 பில்லியனை கனடாவில் முதலீடு செய்ததாக ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். இன்னும் கூடுதல் சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்க்க முற்படுவதாகவும் அவர் கூறினார்.

திரு கார்னி அக்டோபர் 28, 29ஆம் தேதிகளில் சிங்கப்பூருக்கு வரும் முன் மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டார்.

இவ்வாரப் பிற்பாதியில் அவர் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளியல் கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வார்.

குறிப்புச் சொற்கள்