இந்தியாவுடன் நிதி, மின்னிலக்க இணைப்புகளை வலுப்படுத்த பேரளவிலான வாய்ப்புகள் உள்ளன என்றும் எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றங்களிலும் முதலீட்டுச் சந்தைகளிலும் இணைந்து செயல்பட இரு நாடுகளுக்கும் ஆர்வமுள்ளது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதி, வர்த்தக விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார் திரு வோங்.
திரு வோங் பிரதமராகப் பொறுப்பேற்றபின் இந்தியாவிற்கான அவரது முதல் அதிகாரத்துவப் பயணம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கியது. புதுடெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு இந்தியப் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை இந்தியாவின் நிதி துணை அமைச்சர் பங்கஜ் சௌதரி வரவேற்றார்.
அதற்குப் பின்னர் திருவாட்டி நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு நடைபெற்றது. சிங்கப்பூரின் போக்குவரத்துத் தற்காலிக அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், வெளியுறவு அமைச்சு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் ஆகியோரும் அந்தச் சந்திப்பில் பங்கெடுத்தனர்.
அண்மையில் நடைபெற்ற மூன்றாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை சந்திப்பு குறித்து திருவாட்டி நிர்மலாவுடன் கலந்து பேசியதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பில் இரு நாடுகளைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்ற இந்திய அமைச்சர்கள் நால்வரில் திருவாட்டி நிர்மலாவும் ஒருவர்.
சிங்கப்பூர் தரப்பில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும் எரிசக்திக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அணுக்கமான, நீடித்த உறவையும் வலுவான பொருளியல் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பறைசாற்றியதோடு பல முக்கியத் துறைகளில் மேலும் ஒன்றிணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இருதரப்புச் சந்திப்பு குறித்து இந்திய நிதி அமைச்சு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாகக் குறிப்பிட்டது.
வர்த்தகம், முதலீடு, நிதித் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, இணைப்புத்திறன் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணக்கங்களை வலுப்படுத்துவதில் உறுதியான கடப்பாட்டை வெளிக்காட்டியதாகக் கூறப்பட்டது.
தமது மூன்று நாள் பயணத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை (செப்டம்பர் 3), பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சுகாதார, குடும்பநல அமைச்சரும் வேதிப்பொருள், உரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவை பிரதமர் வோங் சந்தித்துப் பேசினார்.
இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகள், முக்கிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அவருடன் விரிவாகக் கலந்துரையாடியதாகத் திரு வோங் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60ஆம் ஆண்டை குறிக்கும் சிறப்புடன் நடைபெறும் இந்தப் பயணத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் அதிபர் திரௌபதி முர்முவையும் திரு வோங் சந்திக்கவிருக்கிறார்.