தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகளின் இருதரப்புப் பயிற்சி நிறைவு

1 mins read
bb9c984a-f2b6-42ed-b899-8f18168a8e67
‘ஆர்எஸ்எஸ் டெனெஷியஸ்’ கப்பலில் சிங்கப்பூர் குடியரசுக் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் குவான் ஹொன் சுவோங் (இடது), இந்தியக் கடற்படையின் ரியர் அட்மிரல் சுஷீல் மேனனை வரவேற்றார். - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகள் வருடாந்தர சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளன.

அந்தப் பயிற்சி அக்டோபர் 24 முதல் 29 வரை நடைபெற்றது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்த கரை சார்ந்த பயிற்சி நடவடிக்கை இவ்வாண்டின் பயிற்சியில் உள்ளடங்கியது. அதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினக் கடற்பகுதியிலும் வங்காள விரிகுடாவிலும் கடல் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் குடியரசுக் கடற்படை, ‘ஆர்எஸ்எஸ் டெனெஷியஸ்’ (RSS Tenacious) கப்பலையும் எஸ்-70பி ‘சீஹாக்’ கடற்படை ஹெலிகாப்டரையும் அங்கு அனுப்பியது. இந்தியக் கடற்படை ‘ஐஎன்எஸ் ஷிவாலிக்’ கப்பல், ‘எம்எச்-60ஆர் சீஹாக்’, நீர்மூழ்கி, கடல்சார் சுற்றுக்காவல் விமானம், இரண்டு போர் விமானங்கள் ஆகியவற்றுடன் பயிற்சியில் பங்கெடுத்தது.

சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சியின் வெற்றி, இந்திய, சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலியுறுத்துகிறது.

“சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சி சிங்கப்பூர், இந்தியக் கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுக்கான வலுவான சான்று. இரண்டு கடற்படைகளும் செயலாக்க ஆற்றல்களை வளர்த்து, பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி ஒரு மதிப்புவாய்ந்த தளம்,” என்று ஆர்எஸ்எஸ் டெனெஷியசின் படைத் தலைவர் (Commanding Officer) லெஃப்டினண்ட் கர்னல் வின்சண்ட் சான் கூறினார்.

இரு கடற்படைகளும் நிபுணத்துவ அறிவாற்றலைப் பரிமாறிக்கொள்வதற்கான தளத்தை அது அமைத்துக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்