சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதலாவது மின்னப்படை பட்டாளத்தின் வீரர்களும் இந்தோனீசிய மின்னற்படை வீரர்களும் தங்கள் இருதரப்பு ராணுவப் பயிற்சியை செப்டம்பர் 8ஆம் தேதி முடித்துக்கொண்டனர்.
கலிமந்தான் மாநிலத்தின் சிங்கவாங் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற வருடாந்தர சந்திரபுரா பயிற்சியில், அதிரடிப் படை வீரர்கள் மின்னற்படை உத்திகளையும் செயல்முறை திட்டமிடுதலையும் பகிர்ந்துகொண்டனர்.
அந்தப் பயிற்சியில் மின்னற்படை வீரர்கள் விமானத்திலிருந்து குதிக்கும் வான்குடை சாகசங்களையும் காட்டில் நடைபெறும் போருக்கான பயிற்சி உத்திகளையும் வெளிப்படுத்தினர்.
“பகிரப்பட்ட அனுபவங்கள் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களிடையே நம்பிக்கையையும் தோழமையையும் வளர்க்க உதவியது. அதே நேரத்தில் அவர்களின் செயல்பாட்டுப் புரிதலையும் வலுப்படுத்தியது,” என்று தற்காப்பு அமைச்சு செப்டம்பர் 9ஆம் தேதி தனது அறிக்கையில் தெரிவித்தது.
“சிங்கப்பூருக்கும் இந்தோனேசிய ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி எடுத்துக்காட்டியது,” என்று முதலாவது மின்னப்படை பட்டாளத்தின் தலைமை அதிகாரி லெஃப்டினென்ட் கர்னல் கோக் யி லோங் கூறினார்.
1994ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட சந்திரபுரா பயிற்சி, சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தற்காப்பு அமைச்சு கூறியது.
இருதரப்புப் பயிற்சிகளுக்கு அப்பால், இருநாட்டுப் படைகளும் தொழில்முறை பரிமாற்றங்கள், ராணுவப் படிப்புகளின் வருகை பரிமாற்றம் போன்ற பிற நடவடிக்கைகளிலும் பங்கேற்கின்றன. வழக்கமான தொடர்புகள் தொழில்முறையை மேம்படுத்துவதுடன் பரஸ்பர புரிதலையும் வளர்க்கின்றன என்றும் அமைச்சு விவரித்தது.

