சிங்கப்பூரும் ஜப்பானும் விண்வெளித் துறையில் ஒத்துழைக்க இணங்கியிருக்கின்றன. அதன் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்பாட்டில் இருதரப்பும் திங்கட்கிழமை (ஜூலை 6) கையெழுத்திட்டன. விண்வெளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஆய்வுப் பணிகளிலும் இணைந்து பணியாற்ற இணக்கம் காணப்பட்டது.
இரு நாடுகளின் விண்வெளித் துறைகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட முதல் உடன்பாடு இது. சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியும் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இதுபற்றிப் பேசியிருந்தனர்.
சிங்கப்பூர் தேசிய விண்வெளி அமைப்பும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு அமைப்பும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். அத்துடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படும். விண்வெளித் தொழில்நுட்பம், பயன்முறை, அறிவியல், ஆய்வு, தொழில்துறை வளர்ச்சி, கல்வி, கொள்கை, கட்டுப்பாட்டுப் பரிமாற்றங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும்.
தோக்கியோவில் நடைபெற்ற ‘ஸ்பேஸ்டைட் 2026’ மாநாட்டில், ஜப்பானின் கூட்டு நிதி வணிக மேம்பாட்டுக் கட்டமைப்பின்கீழ் வணிக, தொழில்துறை ஊக்குவிப்பு ஒத்துழைப்புக்கான கடிதங்களை இரு அமைப்புகளும் பரிமாறிக்கொண்டன. இங்கிலாந்து, பிரான்சுக்குப் பிறகு, இக்கட்டமைப்பின்கீழ் இணையும் மூன்றாவது நாடு சிங்கப்பூர்.
“சிங்கப்பூர், ஜப்பானிய நிறுவனங்களுக்குப் பொதுவாக ஆர்வமுள்ள துறைகளில் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு அமைப்புகளும் கட்டமைப்பின் மூலம் ஆதரவளிக்கும்,” என்று சிங்கப்பூரின் விண்வெளி அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் ஜப்பானின் ஃபியூசிக் மென்பொருள் உருவாக்க நிறுவனத்துக்கும் இடையில் மேலும் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.
பல்வேறு பணிகளைக் கையாள்வதில் தரைக் கட்டுப்பாட்டு குழுக்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய்வது அதன் நோக்கம். வழக்கமான செயற்கைக்கோள் செயல்பாடுகள், விண்கலத் திட்டமிடல், தரைக் கட்டுப்பாட்டு நிலைய ஒதுக்கீடு, தொழில்நுட்பப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல் முதலியவை அந்தப் பணிகளில் சில.
“செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், விண்வெளித் திட்டங்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பெரிய அளவிலும் நிர்வகிப்பதற்கான புதிய வழிகள் விண்வெளித் துறைக்குத் தேவைப்படும்,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் கிறிஸ்டியன் வொல்ஃப்ரம் கூறினார்.
சிங்கப்பூரின் தேசிய விண்வெளி அமைப்பு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. விரிவடைந்துவரும் விண்வெளித் துறையில் சிங்கப்பூர் வாய்ப்புகளைக் கைப்பற்ற உதவுவது அதன் நோக்கம்.

