சிங்கப்பூரும் ஜப்பானும் இருதரப்பு உறவை அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதல் பசுமை உருமாற்றம்வரை பல்வேறு துறைகளில் இன்னும் அணுக்கமாக ஒத்துழைக்க அவை திட்டமிட்டுள்ளன.
இரு தரப்பும் உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தியிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஜப்பானிய பிரதமர் சானே தக்காய்ச்சியும் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்தனர். இருவரும் பேராளர் குழுக்களுடன் தோக்கியோவில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இரு நாட்டுக்கும் இடையில் அரசதந்திர உறவு தொடங்கி 60 ஆண்டு நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில் அவர்களின் அறிவிப்பு வந்துள்ளது.
இரு நாட்டுக்கும் இடையில் நிலவும் பன்முகத்தன்மை கொண்ட உறவின் அடித்தளத்தை உத்திபூர்வப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தும். வளர்ந்துவரும் ஐந்து துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அது உதவும். தடையற்ற வர்த்தகத்தையும் பொருளியல் ஒத்துழைப்பையும் ஊக்குவித்தல்; மின்னிலக்கமயமாதல், தொழில்நுட்பம்; பாதுகாப்பு, தற்காப்பு; பசுமை உருமாற்றம், எரிசக்தி ஒத்துழைப்பு; பங்காளித்துவம், பரிமாற்றங்கள் ஆகியவையே அந்த ஐந்து துறைகள்.
தலைவர்களின் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கும் ஜப்பானியத் தரப்புக்கும் இடையில் தகவல், தொடர்புத் தொழில்நுட்பக் கொள்கை உரையாடலை நிறுவ உடன்பாடு எட்டப்பட்டது.
மின்னிலக்க உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பது குறித்து இருதரப்பும் ஆராய அது வழிவிடும் என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் இரு தரப்பும் இணங்கின. பாதுகாப்பான, நம்பகமான ‘ஏஐ’ சூழலை உருவாக்குவது நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
பேராளர் கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் வோங் பேசினார். கடந்த 60 ஆண்டில் சிங்கப்பூர் நம்பத்தகுந்த, மதிப்புமிகுந்த பங்காளியாக இருந்துவந்துள்ளதை அவர் சுட்டினார்.
“இன்று நமது உறவு முதிர்ச்சியடைந்துள்ளது. ஒரே மாதிரியான உத்திபூர்வக் கண்ணோட்டங்களுடன் நாம் பங்காளிகளாக உருவெடுத்திருக்கிறோம். நமது ஒத்துழைப்பு பன்முகத்தன்மை கொண்டது, இரு தரப்புக்கும் பலன் தரக்கூடியது,” என்றார் பிரதமர் வோங்.
திருவாட்டி தக்காய்ச்சி, இரு நாடும் ஏற்கெனவே வலுவாக உள்ள உறவை இவ்வாண்டு மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பலதரப்பட்ட பரிமாற்றங்கள், திட்டங்களின் மூலம் அது சாத்தியமாகும் என்றார் அவர்.

