சுகாதாரத்துறை சார்ந்த சாதனங்களுடன் தொடர்புடைய ஒழுங்குமுறையை மேம்படுத்த சிங்கப்பூரும் ஜப்பானும் அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன.
இதற்காக சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையமும் ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், நல்வாழ்வு அமைச்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 20) ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதோடு, மருந்து உற்பத்தியாளர்களுக்கும் இறுதியில் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அனைத்துலக ஒத்துழைப்பின் மூலம் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்காகப் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது வலுவாக்குகிறது.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி துணைப் பேராசிரியர் (டாக்டர்) ரேமண்ட் சுவா மற்றும் ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், நல்வாழ்வு அமைச்சின் மருந்து பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநரான திரு நவோகி மியாமோட்டோ ஆகியோர் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
இருநாடுகளுக்கும் பலனளிக்கக்கூடிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம் தொடர்பான தகவல் பரிமாற்றம், அனைத்துலக மற்றும் வட்டாரத் திட்டங்களில் பங்காளித்துவம், அறிவியல் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இரு நாடுகளிலும் உள்ள மருந்து உற்பத்தியாளர்களுக்கான தரமான உற்பத்தி அணுகுமுறை சான்றிதழ்கள் வழங்குவதிலும் மருந்து உற்பத்தி முறை கண்காணிப்பிலும் கவனம் செலுத்தப்படும்.
இரட்டிப்பு ஆய்வுகளை அகற்றுவதன் மூலம், இரு நாடுகளிலும் உள்ள நோயாளிகள் பாதுகாப்பான மருந்துகளை வேகமாகவும் எளிதாகவும் பெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது ஆண்டுக்குச் சராசரியாக மூன்று இரட்டிப்பு ஆய்வுகளை அகற்றும் மற்றும் மருந்துகளைப் பெறுவதற்கான காலத்தை ஆறு மாதங்கள் வரை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டாலும் அவை கடுமையான பாதுகாப்புத் தரங்களைத் தொடர்ந்து பின்பற்றும்.
மருந்துகள், உயிரணு, திசு மற்றும் மரபணு சிகிச்சைத் தயாரிப்புகள், மருத்துவச் சாதனங்கள் போன்ற தயாரிப்புகளுக்கான ஒழுங்குமுறை நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் புத்தாக்கத்துக்கு ஆதரவு வழங்கவும் சுகாதாரத்துறை சார்ந்த சாதனங்களின் பல்வேறு கட்டங்களில் ஒத்துழைக்க அதிகாரபூர்வ இயக்கமுறைக்குப் புரிந்துணர்வுக் குறிப்பு வழிவகுக்கிறது.
2002ஆம் ஆண்டில் ஜப்பான்-சிங்கப்பூர் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டு ஒத்துழைப்பின் விளைவாக இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டுள்ளது.

