சிங்கப்பூர் மலேசிய ஆகாயப் படைகள் பங்குபெற்ற மூன்று நாள் கூட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) நிறைவுபெற்றுள்ளது.
பகற்பொழுதிலும் இரவு நேரத்திலும் தேடுதல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாவனைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டர்களின் உதவியோடு சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
உண்மையான பயிற்சிச் சூழலில் திட்டமிடுவதையும் அதனைச் செய்துமுடிப்பதையும் மேம்படுத்துவது நோக்கம் என்று தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பாவனைப் பயிற்சிகள், சிங்கப்பூரின் தென்கடற்கரையில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதிலும் நீரில் தத்தளிப்போரை விரைந்து காப்பாற்றுவதிலும் கவனம் செலுத்தியதாக அறிக்கை குறிப்பிட்டது.
சாரெக்ஸ் மால்சிங் (Sarex Malsing) என்று அழைக்கப்படும் பயிற்சிகளில் சிங்கப்பூர் ஆகாயப்படையும் அரச மலேசிய ஆகாயப்படையும் ஈடுபட்டன. விமானிகள், நிலத்திலிருந்து செயல்படும் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் ஆகியோர் பயிற்சிகளில் பங்கேற்றனர்.
வருடாந்தரப் பயிற்சிகள் இம்முறை செம்பவாங் ஆகாயப்படைத் தளத்தில் செப்டம்பர் 3, 4, 5ஆம் தேதிகளில் நடைபெற்றன.