சிங்கப்பூரும் மலேசியாவும் நண்பர்களாக இருப்பதே நல்லது என்று மலேசிய முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் கூறியுள்ளார்.
எஸ்பிஎச் மீடியாவின் 2025 ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு கலந்துரையாடலில் புதன்கிழமை (அக்டோபர் 8) பங்கேற்றுப் பேசிய திரு ஸஃப்ருல், உலகம் முழுவதும் நிலவும் நிச்சயமற்ற சூழலில், இரு அண்டை நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“எதிரிகளாக இருந்து போட்டியிடுவதைவிட நண்பர்களாக இருப்பதே நல்லது. இணைந்து செயல்பட்டால் நாம் அதிகம் சாதிக்க முடியும். இதை நாம் ஏற்கெனவே செய்துகாட்டியுள்ளோம்,” என அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் இணைந்து ஈட்டிய வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அவர் ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தைச் (JS-SEZ) சுட்டினார்.
அதன் தொடர்பில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தம், மேம்பட்ட உற்பத்தி, தளவாடங்கள், மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் எல்லை தாண்டிய வர்த்தகம், முதலீட்டை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது, நிறுவனங்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதற்காக அல்ல என்றும் மாறாக, தென்கிழக்காசியாவில் திறமையான, ஒருங்கிணைந்த தளத்தை நாடும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே என்றும் திரு ஸஃப்ருல் விளக்கினார்.
இதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு பயனடையும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், நேரடியாகப் பயனடையாவிட்டாலும் பெரிய நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியில் இணைந்து அவை வளர்ச்சி பெற்று செழிக்க வாய்ப்புண்டு என்றார்.
சுங்க நடைமுறைகளைச் சீரமைக்கவும், சரக்குகள், தொழிலாளர்களின் இயக்கத்தை மேம்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகள் சிறிய வணிகங்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் என்றும் திரு ஸஃப்ருல் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகரித்துவரும் உலகளாவிய போட்டிச் சூழலுக்கு இடையே ஆசியான் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 2025ல் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியா, வரவிருக்கும் 47வது ஆசியான் மாநாட்டை நடத்தும்.
ஆசியானின் கூட்டுவலிமை, அதன் ஒருமித்த கருத்திலும் பன்முகத்தன்மைக்கான உறுதியிலும்தான் உள்ளது என்று அமைச்சர் ஸஃப்ருல் சொன்னார்.
இதுவே, உறுப்பு நாடுகள் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் கையாண்டு ஒரே இலக்குகளை நோக்கிப் பயணம் செய்ய வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட்டாரத்தில் பொருளியல் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளைப் பற்றியும் திரு ஸஃப்ருல் பேசினார்.
வர்த்தக நடைமுறைகளை மேலும் எளிதாக்குவதையும் சுங்கத் தரநிலைகளை ஒருங்கிணைப்பதையும் உறுதிசெய்யும் வகையில் ஆசியான் நாடுகள் இடையிலான பொருள் வர்த்தக ஒப்பந்தம் (ATIGA) புதுப்பிக்கப்படவுள்ளது. அந்த மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இம்மாதம் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இதனால் ஆசியானில் வர்த்தகம் பெருகும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் திரு ஸஃப்ருல்.
மற்றொரு முக்கிய முயற்சியாக அவர் குறிப்பிட்ட ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் ஏற்பாட்டு உடன்பாடு (DEFA), 2030க்குள் வட்டார மின்னிலக்கப் பொருளியலின் மதிப்பைத் திட்டமிடப்பட்ட US$1 டிரில்லியனிலிருந்து US$2 டிரில்லியன் என இருமடங்காக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தின்கீழ், இந்த உடன்பாட்டை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று திரு ஸஃப்ருல் தெரிவித்தார்.
மேலும், வட்டாரத்தில் மின்னிலக்கக் கொள்கைகள் மூலம் முதலீட்டை ஈர்க்கவும், விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையை வலுப்படுத்தவும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மலேசியா முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் சொன்னார்.
“ஆசியான் ஒரு குழுவாக, தொடர்ந்து ஒருவரை ஒருவர் ஈடுபடுத்துவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
2027ல் சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, இந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று தாம் நம்புவதாகவும் திரு ஸஃப்ருல் குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கத்தில் தமது பதவிக் காலத்தைப் பற்றிப் பேசுகையில், செனட்டர் என்ற முறையில் அது டிசம்பரில் முடிவடைவதை அவர் உறுதிசெய்தார்.
இதுவரை மூன்று பிரதமர்களின்கீழ் பணியாற்றியுள்ள திரு ஸஃப்ருல், அரசியலில் தொடர்ந்து ஈடுபட விரும்புவதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவத்தின்கீழ் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் கூறினார்.
இடைப்பட்ட காலத்தில், அமைச்சராக இல்லாவிட்டாலும், ஏதோ ஒருவகையில் பொதுச் சேவையில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் சொன்னார்.