ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்குத் தேவையான நிறுவன, ஒழுங்குமுறை, செயல்முறைக் கட்டமைப்புகளை உறுதிசெய்வதில் கொண்டுள்ள கடப்பாட்டினை சிங்கப்பூரும் மலேசியாவும் மறுவுறுதிப்படுத்தியுள்ளன.
சிறப்புப் பொருளியல் மண்டல உடன்பாட்டை உறுதிசெய்வதில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவை குறிப்பிட்டன.
இஸ்கந்தர் மலேசியா தொழில்நடுவத்தின் ஒரு பகுதியாக கூலாயை அரசிதழில் இடம்பெறச் செய்வதும் முன்னேற்றத்தில் அடங்கும்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் ஒன்பது முதன்மைப் பகுதிகளில் ஒன்றாகக் கூலாய் திகழும்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இஸ்கந்தர் மலேசியாவிற்கான மலேசியா-சிங்கப்பூர் கூட்டு அமைச்சர்நிலைக் குழுவின் 17வது சந்திப்பிற்குப்பின் இருநாட்டு அமைச்சர்களும் கூட்டறிக்கைமூலம் இவற்றைத் தெரிவித்தனர்.
கோலாலம்பூரில் உள்ள ‘டபுள்ட்ரீ பை ஹில்டன்’ ஹோட்டலில் நடந்த அச்சந்திப்பிற்கு தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டும் மலேசியப் பொருளியல் அமைச்சர் அமீர் ஹம்சா அசிசானும் தலைமை தாங்கினர்.
இருதரப்புப் பொருளியல் ஒத்துழைப்பு முயற்சியான அந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலம் 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கி இருக்கும். அதாவது, கிட்டத்தட்ட சிங்கப்பூரைப் போல ஐந்து மடங்கு பரப்பளவில் அது செயல்படும்.
சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் வெற்றிக்கு வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதன் அவசியத்தை இருநாடுகளும் குறிப்பிட்டன. அந்த ஒத்துழைப்பானது தற்போது நேரிய முறையில் சென்றுகொண்டிருப்பது குறித்து இருதரப்பும் மனநிறைவு தெரிவித்தது என்றும் அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புப் பொருளியல் மண்டலத்தைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கூட்டுப் பணிக்குழு எட்டியுள்ள முன்னேற்றம் குறித்தும் சந்திப்பின்போது அமைச்சர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இஸ்கந்தர் மலேசியாவிற்கான மலேசியா-சிங்கப்பூர் கூட்டு அமைச்சர்நிலைக் குழுவைப் புதுப்பித்து, ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் குழு என மாற்றியமைக்கவும் இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
“இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும், குறிப்பாக அனைத்துலக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்புப் பொருளியல் மண்டலம் விரிவாக இருப்பதை உறுதிசெய்வதை இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது,” என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
அந்த ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் குழுவின்கீழ், சிறப்புப் பொருளியல் மண்டலம், போக்குவரத்து, மற்ற எதிர்காலத் துறைகள் சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்க பணிக்குழுக்கள் அமைக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
வரும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் 12வது சிங்கப்பூர் - மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு சிங்கப்பூரில் நடக்கவுள்ளது. அப்போது, பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துப் பேசுவர்.

