தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாக்சி சேவையை மேலும் வசதியாக்க சிங்கப்பூரும் மலேசியாவும் பேச்சு

2 mins read
1ebf61bd-8b03-4f81-931a-5da7acc468ea
தற்போது சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த டாக்சிகள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பயணிகளை இறக்கிவிடுகின்றன. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் டாக்சி சேவை வழங்குவதன் தொடர்பில் இரு தரப்புப் பேச்சு நடைபெறுவதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ‌ஷுவெலிங் கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அல்லாமல் எங்கு வேண்டுமென்றாலும் பயணிகளை இறக்கிவிட டாக்சிகளை அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுவதாக அவர் சொன்னார். இரு தரப்புக்கும் அது பொருந்தும்.

“ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லத் தேவையிருப்பதைப் பயணிகளிடமிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம்,” என்று திருவாட்டி சுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரு நாடுகளின் பயணிகளுக்கும் அது அதிக வசதியாக இருக்கும் என்றார் அவர்.

ஜோகூர்-சிங்கப்பூர்ப் பொருளியல் வட்டாரம் உருவாகிவரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் கூடுதலான இடங்களுக்கு நேரடிச் சேவை வழங்குவதை அனுமதிப்பது பற்றிப் போக்குவரத்து அமைச்சு ஆராய்கிறதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் திருவாட்டி சுன் பதிலளித்தார்.

தற்போது இரண்டு நாடுகளையும் சேர்ந்த டாக்சிகள் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் பயணிகளை இறக்கிவிடுகின்றன. சிங்கப்பூர் டாக்சிகளுக்கு ஜோகூர் பாருவின் லார்க்கின் சென்ட்ரல், மலேசிய டாக்சிகளுக்குச் சிங்கப்பூரின் பான் சான் முனையம் ஆகியவையே அவை.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பதிவுசெய்யப்பட்ட டாக்சிகள் மட்டுமே அத்தகைய சேவைகளை வழங்க முடியும். அவற்றுக்கான உரிமத்தைச் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையமும் மலேசியாவின் நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பும் ஏற்றுக்கொள்வது அவசியம்.

தரப்புக்கு 200 டாக்சிகள் அத்தகைய சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அவற்றுக்கான உரிமம் பெற்ற ஏறக்குறைய 300 டாக்சி ஓட்டுநர்கள் இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலையில் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்