சிறிய நாடுகளாக இருப்பதால் சிங்கப்பூரும் மாலத்தீவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ளது.
இந்த நிலையில் இரு நாடுகளும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டு துறைகளில் ஒத்துழைக்க இணக்கம் கண்டுள்ளன.
ஜூன் 30ஆம் தேதி மதியம் வாழ்க்கைத் தொழில் கல்வி, திறனாற்றல் ஆகிய இதர இரண்டு துறைகளிலும் ஒத்துழைக்க இரு நாடுகளும் சம்மதித்தன.
இதன் மூலம் இரு நாடுகளின் மாணவர்கள் கல்விப் பயணம் மேற்கொண்டு பரஸ்பர பரிமாற்றம் மற்றும் அறிவாற்றலை பகிர்ந்துகொள்ள உதவும்.
பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் காணொளி வழியாகப் பங்கேற்றார். மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள மாலத்தீவு அதிபர் முஹம்மட் முயிசு ஜூலை 2ஆம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார்.
இவரது வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஐம்பது ஆண்டு அரசதந்திர உறவையும் குறிக்கிறது.
டாக்டர் முயிசு அதிபர் பொறுப்பை ஏற்று முதல் முறையாக சிங்கப்பூர் வந்துள்ளார். இது, அவரது 5வது உயர்மட்ட அளவிலான பயணமாகும்.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரும் மாலத்தீவு உலகளாவிய மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடல்மட்ட உயர்வு, வெப்பநிலை அதிகரிப்பு, மோசமான பருவநிலை, இயற்கைச் சூழல் மாற்றம் போன்றவை நாடுகளுக்கு மிரட்டலாக உள்ளன. சிறிய நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகள் தனிப்பட்டவையாக இருக்கின்றன,” என்று அவர் கூறினார்.
டாக்டர் முயிசுவையும் அவரது துணைவியார் சஜிதா முகம்மதுவும் கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அவர்களுடன் மாலத்தீவின் ஒன்பது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரும் மாலத்தீவும் பல வழிகளில் நெருக்கமான பங்காளிகளாக இருக்கின்றன என்று திரு தர்மன் மேலும் கூறினார்.
டாக்டர் முயிசும் திருமதி சஜிதாவும் சிங்கப்பூர் பூமலையில் உள்ள தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்கும் சென்றனர். அங்கு புதிய வகை ஆர்க்கிட் மலருக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

