‘ஃபிரன்டியர் ஏஐ’ எனப்படும் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பாதுகாப்பானவையா என்பதை அறிய சிங்கப்பூர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிவருகிறது.
பாதுகாப்பு அம்சங்களை நன்கு அறிவதற்கான சோதனைகளை நடத்த அத்தளங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுவருகிறது.
தலைதூக்கியுள்ள கவலை
அமெரிக்காவின் ஆந்த்ரோப்பிக் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் கிளோட் மித்தோஸ் பிரீவியூ (Claude Mythos Preview) தளத்தின் ஆக அண்மைய வடிவத்தால் இதுவரை அறியப்படாத மென்பொருள் பிரச்சினைகள் போன்றவற்றைத் தானாகவே அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உலகளவில் கவலை எழுந்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் மைக்ரோசாஃப்ட்டும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்கீழ், இரு தரப்பும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைச் சோதனையிடவும் ஆராயவும் இணைந்து வழிமுறைகளை உருவாக்கவுள்ளன. அவை வெவ்வேறு மொழிகளில் எவ்வாறு பாதுகாப்பாகச் செயல்படும் என்பதை ஆராய்வதும் அதில் அடங்கும்.
சீராகச் செயல்படுவதற்கான ஆகச் சிறந்த வழிமுறைகள் (best practices), இதன் தொடர்பிலான ஆளுமைக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் தொடர்பில் இரு தரப்பும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் செய்யும்.
எந்த ஒரு தரப்பையும்விட செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்துவருகிறது; அதனால் இதுபோன்ற பங்காளித்துவங்கள் முக்கியம் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் சுட்டியது. இம்முயற்சி, ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்ற சிங்கப்பூரின் அணுகுமுறைக்கு ஏற்றது என்று ஆணையம் குறிப்பிட்டது.
அடுத்த இலக்கு
“பாதுகாப்பான, நம்பகமான முறையில் வளர்ச்சியும் செயல்பாடும் இடம்பெறுவதை உறுதிசெய்தபடி புத்தாக்கத்துக்கு வகைசெய்யும் நம்பகமான கட்டமைப்பு இருப்பதே இலக்காகும்,” என்று ஆணையம் விளக்கமளித்தது.
செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பாதுகாப்பான, பொறுப்பான முறையில் உருவாக்கிச் செயல்படுத்தலாம் என்ற உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்தை வடிவமைக்க சிங்கப்பூர் உதவுகிறது என்று மைக்ரோசாஃப்ட்டின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் (responsible AI) தலைவரான நட்டாஷா கிரேம்ப்டன் கூறினார்.

