சிங்கப்பூரும் தென்கொரியாவும் அவற்றுக்கிடையிலான வலுவான, நீண்டகாலப் பங்காளித்துவத்தை மறுஉறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் தென்கொரியப் பயணத்தின்போது இருதரப்பும் இவ்வாறு மறுஉறுதிப்படுத்தின.
தென்கொரியத் துணைப் பிரதமர் டாக்டர் லீ ஜு-ஹோ, நவம்பர் 19ஆம் தேதி திரு ஹெங்கிற்கு மதிய உணவு விருந்தளித்துச் சிறப்பித்ததாக பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.
இரு நாட்டு பல்கலைக்கழகங்கள், ஆய்வுக் கல்விக்கழகங்களுக்கு இடையே அறிவியல், ஆய்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், வருங்காலப் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அந்த ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆக்கபூர்வ[Ϟ]மாகக் கலந்துரையாடினர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு உட்பட, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மேம்பட்ட ஆதரவை வழங்கும் கல்வித் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு குறித்தும் திரு ஹெங்கும் டாக்டர் லீயும் கலந்துரையாடினர்.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 2025ஆம் ஆண்டு இருதரப்பு உறவுகளை உத்தேசப் பங்காளித்துவத்துக்கு மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் துணைப் பிரதமர்களும் கடப்பாடு தெரிவித்தனர்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங், நவம்பர் 17ஆம் தேதி முதல் 21வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு தென்கொரியா சென்றுள்ளார்.
முன்னதாக, தென்கொரியாவின் சியோங்கி மாநிலத்துக்குச் சென்றிருந்த அவர், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அங்குப் பல ஒத்துழைப்பு வாய்ப்புகள் காத்திருப்பதாகக் கூறினார்.

