கோத்தன்பர்க்: சிங்கப்பூரும் சுவீடனும் சமூக ஒருமைப்பாடு, கடினமான உலகச் சூழலில் போட்டித்தன்மையை நிலைநிறுத்துதல் முதலிய முக்கிய அம்சங்களில் தொடர்ந்து ஒன்று மற்றொன்றிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
குவான்டம், 6ஜி போன்ற உயர்-தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பதற்குரிய முறையான ஒப்பந்தங்களுக்கு அப்பால், அவ்வாறு செய்யலாம் என்றார் அவர்.
அதிபர் தர்மன், சுவீடனுக்கான தமது அரசுமுறைப் பயணத்தின் இறுதி நாளான புதன்கிழமை (அக்டோபர் 21) செய்தியாளர்களிடம் பேசினார்.
இரு நாடுகளும் பொருளியல் வளர்ச்சியில் அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச்செல்ல முற்படுகின்றன என்றும் இதில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 20ஆம் தேதி, ஸ்டாக்ஹோமில் உள்ள ‘ஃப்ரைஷுசெட்’ என்ற அமைப்பிற்குச் சென்று அவர் பார்வையிட்டார். வாழ்க்கையில் சிரமப்படுவோர் உட்பட அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த இளையர் தன்னம்பிக்கை பெறவும், மேம்படுத்திக்கொள்ளவும், சமூகத்தில் தாங்களும் ஒரு பங்கு வகிப்பதாக உணர்வதற்கும் இந்த அமைப்பு கைகொடுக்கிறது.
சுவீடன் மக்களின் சமத்துவப் பண்பும் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும் என்ற ஆழமான கடப்பாடும் பாராட்டத்தக்கவை என்றார் திரு தர்மன். அதே வேளையில், மிகச் சிறந்த இலக்குகளைக் கொண்டு இயங்கும் தொழில்முனைவர்களை உருவாக்கும் ஆற்றலையும் அந்நாடு கொண்டுள்ளது. உலகளாவிய நிலையில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புடைய புதிய நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கிய பெருமை சுவீடனுக்கு உண்டு.
“நிச்சயமாக அனைவரும் அதுபோல் இல்லை. ஆனால் அவர்களால் அந்தச் சமநிலையைப் பேண முடிந்துள்ளது,” என்று அதிபர் தர்மன் கூறினார்.
சுவீடனின் நிறுவனக் கலாசாரமும் முன்பு பரிவர்த்தனை சார்ந்த உறவாக இருந்த நிலையிலிருந்து, கூட்டுறவை அதிகம் சார்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள், சொந்தமாகத் தொழில் தொடங்கியுள்ளனர்; அதே நேரத்தில் வெற்றிகரமான நிறுவனர்கள் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் என்று அதிபர் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் அதிகமுள்ள சமூகத்தை அவர்கள் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதில் ஒத்துழைப்பு, வழிகாட்டுதல், ஒருவருக்கொருவர் முதலீடு செய்வது ஆகியவை அடங்கும்,” என்றார் அவர்.
நிறுவனங்கள் வளர்வதற்கும் அனைத்துலக அளவில் போட்டியிடுவதற்கும் தாங்கள் வழிவகுக்க வேண்டும் என்ற பார்வையையே இரு அரசாங்கங்களும் கொண்டுள்ளன.
அதிபர், தமது பயணத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், வணிகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே சுவீடனில் நிலவும் நீண்டகாலக் கூட்டுறவுக் கலாசாரம் பற்றியும் பேசினார்.
இது ஊதியம் குறித்த பேச்சுகளுக்கு அப்பால், நிறுவனங்கள் ஊழியர்களுக்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியதாகவும் மாறிவருகிறது என்றார் அவர்.
“ஒவ்வொரு வேலையும் ஒரே மாதிரியாக இல்லை என்றாலும், மக்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதற்கான உத்திகளை அவர்கள் வகுத்து வருகின்றனர்,“ என்று திரு தர்மன் சொன்னார்.
“பெரிய நிறுவனங்கள் தங்கள் சொந்த நிறுவனங்களுக்குள்ளேயே மக்களை வேறு வேலைகளில் அமர்த்த முடிகிறது; சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற உதவுகின்றன. சிங்கப்பூரும் இதையே செய்ய முற்படுகிறது. மேலும் இதில்தான் இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.
ஒற்றுமைகளுக்கு அப்பால், கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கை சார்ந்த உறவை இருதரப்பும் வளர்த்துக்கொண்டுள்ளதால், சிங்கப்பூரும் சுவீடனும் இணைந்து செயல்பட முடியும் என்று அதிபர் தர்மன் உறுதியாகச் சொன்னார்.
