சிங்கப்பூரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் (யுஏஇ) விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் போன்ற இந்த உடன்படிக்கை, வர்த்தகம், முதலீட்டுப் பரிமாற்றங்களை எளிதாக்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அபுதாபியில் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் சந்திப்பின்போது, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், யுஏஇ அதிபர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிவித்தனர்.
அக்டோபர் 18ஆம் தேதி கத்தாரில் தொடங்கிய பிரதமர் வோங்கின் ஐந்து நாள் மத்திய கிழக்குப் பயணத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 21ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், வர்த்தகம் முதல் உள்கட்டமைப்பு, கீழ்நிலை நடவடிக்கைகள் வரை எரிசக்தி மதிப்புச் சங்கிலி முழுவதும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய ஒரு கூட்டு எரிசக்திப் பணிக்குழுவை அமைக்கச் சிங்கப்பூரும் யுஏஇயும் ஒப்புக்கொண்டன.
சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தக தொழில்துறை அமைச்சு, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பணிக்குழு, அபுதாபி-சிங்கப்பூர் கூட்டு மன்றத்தின் கீழ் வரும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், தங்களின் எரிசக்தி மாற்றத்திற்கான இலக்குகளை ஆதரிப்பதிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரும் யுஏஇயும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இச்சந்திப்பின் மற்றோர் ஒப்பந்தம் சிங்கப்பூர், யுஏஇ இடையே நீர் மேலாண்மை, நீர் தொழில்நுட்ப மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த முயல்கிறது.
பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், நோய்க்கிருமிகளைப் பரப்பும் உயிரினங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், செயல்பாட்டு அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்காக, சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு, அபுதாபி பொதுச் சுகாதார மையம் ஆகியவற்றுக்கு இடையே மற்றோர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதன்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், யுஏஇக்கும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வட்டாரத்துக்கும் ஏற்பட்டுள்ள இந்த கடினமான காலகட்டத்தில், ஒரு நம்பகமான பங்காளராகவும் நண்பராகவும் சிங்கப்பூர், யுஏஇக்குத் துணையாக நிற்கும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
