சிங்கப்பூரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் (யுஏஇ) அரசாங்க ஊழியர் பயிற்சி, சமுதாய மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களில் எட்டு இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலிது பின் முகமது பின் ஸயீத் அல் நஹ்யான், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) சிங்கப்பூருக்கு வந்த வேளையில், இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன.
ஷேக் காலிதுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் லாரன்ஸ் வோங்கை அவர் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே அன்பான நட்புறவையும் பொதுவான நலன்களையும் மறுவுறுத்திப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஷேக் காலிதுடன் தாம் ஒரு நல்ல, பரந்த அளவிலான கலந்துரையாடலை நடத்தியதாகவும் இது புவிசார் அரசியல், தூய்மையான எரிசக்தி, சுற்றுலா, அருங்காட்சியக நிரலாக்கம் போன்ற அம்சங்கள் அதில் அடங்கியதாகவும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் பிரதமர் வோங் கூறினார்.
அபுதாபி-சிங்கப்பூர் கூட்டு மன்றத்தின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பொது நிர்வாகம், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் புலமையையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்வதை அவர்கள் வரவேற்றனர் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியது.