சிங்கப்பூருக்கும் உக்ரேனுக்கும் இடையில் வான்வழித் தொடர்பு ஒப்பந்தம்

2 mins read
aa6ab785-40ca-47be-bf68-07322bebbe35
பிரதமர் லாரன்ஸ் வோங் (வலம்) இஸ்தானாவில் ஜூன் 2ஆம் தேதி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்தார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூருக்கும் உக்ரேனுக்கும் இடையில் வான்வழித் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வந்துள்ள உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் ஆகியோரை ஜூன் 2ஆம் தேதி சந்தித்தார்.

அதிபர் தர்மனை அவர் சந்தித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பார்ந்த நல்லுறவை இரு அதிபர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் (இடம்) ஜூன் 2ஆம் தேதி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை இஸ்தானாவில் வரவேற்றார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் (இடம்) ஜூன் 2ஆம் தேதி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை இஸ்தானாவில் வரவேற்றார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

உலக நிலவரம் குறித்துக் கலந்துரையாடிய தலைவர்கள் அனைத்துலகச் சட்டம், ஐக்கிய நாட்டுச் சாசனம் ஆகியவற்றை மதித்து நடப்பதன் அவசியம் குறித்து இணக்கம் கண்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்த உக்ரேனிய அதிபர், வர்த்தகம், பொருளியல் உறவுகள் போன்ற அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

அனைத்து நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், எல்லை வரையறை ஆகியவற்றை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் வோங்கும் அதிபர் ஸெலென்ஸ்கியும் உக்ரேன் - சிங்கப்பூர் விமானச் சேவை ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் சிங்கப்பூருக்கான உக்ரேனியத் தூதர் கத்ரினா ஸெலென்கோவும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

(இடமிருந்து) உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி, உக்ரேனியத் தூதர் கத்ரினா ஸெலென்கோ, போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், பிரதமர் லாரன்ஸ் வோங்.
(இடமிருந்து) உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி, உக்ரேனியத் தூதர் கத்ரினா ஸெலென்கோ, போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

இந்த ஒப்பந்தம், இரு நாட்டு விமான நிறுவனங்களும் இருதரப்புக்கும் இடையே எண்ணிக்கை வரம்பற்ற விமானச் சேவைகளை இயக்க வழிவகுக்கும். பயணிகள் விமானங்களுக்கும் சரக்கு விமானங்களுக்கும் இது பொருந்தும்.

பயணிகள் எண்ணிக்கை, விமானப் பாதை, விமான ரகம் ஆகியவை தொடர்பில் எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்காது என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்