வர்த்தகங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்க சிங்கப்பூரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் கூடுதல் பங்களிக்க முடியும்: பிரதமர் வோங்

வர்த்தகங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்க சிங்கப்பூரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் கூடுதல் பங்களிக்க முடியும்: பிரதமர் வோங்

படம்: லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்

21 Oct 2026 - 5:56 pm

2 mins read

அரசாங்கப் பங்காளித்துவத்துக்கு அப்பாற்பட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தங்கள் வர்த்தகங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிங்கப்பூருக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) வாய்ப்புள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அபுதாபியில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் வர்த்தகத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான தமது அதிகாரத்துவப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் சமூக ஊடகங்களில் இவ்வாறு கூறினார்.

அன்றைய தினம் முன்னதாக, அவர் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானையும் சந்தித்து, இரு நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.

எண்ணெய், எரிவாயு மட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அணுசக்தித் துறைகளிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் குறிப்பிடத்தக்க பலங்களைக் கொண்டுள்ளது என்று பிரதமர் வோங் கூறினார்.

மேலும், புதிய திறன்களில், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு, தற்காப்புத் தொழில்நுட்பங்களில், யுஏஇ பெரிதும் முதலீடு செய்துவருகிறது என்றும் பிரதமர் வோங் கூறினார்.

இந்தத் துறைகளிலும் சிங்கப்பூர் ஆர்வம் கொண்டிருப்பதால், இரு தரப்பினரும் புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, ஒருவருடைய பலங்களை மற்றவர் பயன்படுத்தி, இணைந்து மேலும் வலுவடையலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை, அபுதாபியின் நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவரும், அபுதாபி அரசாங்க முதலீட்டு நிறுவனமான முபதாலாவின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான கல்தூன் கலீஃபா அல் முபாரக் ஏற்றுநடத்தினார்.

முன்னதாக, அக்டோபர் 20ஆம் தேதி, அபுதாபி பட்டத்து இளவரசருடனான சந்திப்பின்போது, ​​இரு தலைவர்களும் தங்கள் நாடுகளை எவ்வாறு எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்துவது என்பது குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அதே வேளையில், தங்கள் பாரம்பரியத்தில், விழுமியங்களில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சிங்கப்பூரின் நீண்டகாலப் பங்காளியாக இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர் வோங், “இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான முன்னுரிமைகள் உள்ளன. ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்தும் அணுகுமுறைகளிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்லாரன்ஸ் வோங்இறையாண்மை