தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் ஹெங் கீயும் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சின் கொள்கைகள் பிரிவைச் சேர்ந்த அமேன்டா ஜே. டோரியும் இருநாடுகளுக்கும் இடையிலான மிக நெருங்கிய தற்காப்பு உறவுகளை மறுவுறுதி செய்துகொண்டனர்.
இருவரும் 14வது சிங்கப்பூர் - அமெரிக்கா உத்திபூர்வப் பாதுகாப்புக் கொள்கை கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர்.
இந்தக் கலந்துரையாடல் செப்டம்பர் 13ஆம் தேதியன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
ஆசிய பசிபிக் வட்டாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பது முக்கியம் என்று கலந்துரையாடலின்போது இருநாடுகளும் வலியுறுத்தின.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுக்கான கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளின் மூலம் ஆசியான் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு, உறவு தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள ராணுவத் தளங்கள், வசதிகளை அமெரிக்கப் படையினர் பயன்படுத்துவது குறித்து 1990ஆம் ஆண்டில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது.
இதன்மூலம் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படைகளால் செயல்பட முடிவதாகவும் சிங்கப்பூரின் இந்த நீண்டகால ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் திருவாட்டி டோரி கூறினார்.
அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் ஆயுதப் படைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு சான், அதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியிருப்பதைத் திரு சான் சுட்டினார்.
தற்காப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தற்காப்பு விநியோகச் சங்கிலியின் மீள்திறனை உறுதி செய்யவும் இருநாடுகளும் கொண்டுள்ள பொதுவான இலக்கை திரு சானும் திருவாட்டி டோரியும் மறுஉறுதி செய்துகொண்டனர்.
இருநாடுகளிலும் புதிய, வளர்ந்துவரும் துறைகள் தொடர்ந்து விரிவடைவதை திரு சானும் திருவாட்டி டோரியும் வரவேற்றனர்.


