சிங்கப்பூரும் வியட்னாமும் தற்காப்பு உறவை வலுப்படுத்தவிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளார். தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஹனோய்க்கு மேற்கொண்டுள்ள அதிகாரத்துவப் பயணத்தின் இறுதியில் திரு சான் அவ்வாறு தெரிவித்தார்.
பயணத்தின்போது அவர் வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின்னைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பார்ந்த உறவை தலைவர்கள் இருவரும் மறுவுறுதிப்படுத்தினர். பொதுச் சேவை ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான், திரு பாமுடன் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தரவு, நிதி, தலைமைத்துவம் முதலியவை குறித்து விவாதித்ததாகக் கூறினார்.
ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாடு, ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பு போன்ற வட்டார முயற்சிகளுக்குச் சிங்கப்பூரும் வியட்னாமும் ஆதரவளிப்பதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
திரு சான் வியட்னாமின் தேசிய தற்காப்பு அமைச்சர் ஜெனரல் பான் வான் கியாங்கையும் சந்தித்தார். உலக நடப்புகள் பற்றி இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
திரு சானுடன் தற்காப்புத் துணையமைச்சர் டெஸ்மண்ட் சூவும் வியட்னாமுக்குச் சென்றிருந்தார்.