சிங்கப்பூரும் வியட்னாமும் அரிசி வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்து

2 mins read
22b83472-649f-46c7-bafd-71cd4defeaf2
விநியோகச் சிக்கல் ஏற்படும் காலத்தில் சிங்கப்பூர் வியட்னாமிலிருந்து தடையின்றி அரிசியை வாங்குவதற்குப் புதிய உடன்பாடு உத்தரவாதம் தரும். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கியோங்ஜு: சிங்கப்பூரும் வியட்னாமும் அரிசி வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை உடன்பாடு உறுதிசெய்யும்.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரே‌ஸ் ஃபூவும் வியட்னாமின் தொழில், வர்த்தக அமைச்சர் நுயென் ஹோங் டியெனும் அதில் கையெழுத்திட்டனர். தென்கொரியாவில் நடைபெறும் ஏபெக் தலைவர்கள் சந்திப்புக்கு இடையே வியாழக்கிழமை (அக்டோபர் 30) ஒப்பந்தம் கைகூடியது.

விநியோகச் சிக்கல் ஏற்படும் காலத்தில், சிங்கப்பூர், வியட்னாமிலிருந்து தடையின்றி அரிசியை வாங்குவதற்குப் புதிய உடன்பாடு உத்தரவாதம் தரும். வியட்னாம், அதற்குரிய அனுமதியை மறுக்காமல் அரிசி ஏற்றுமதிக்கு ஆவன செய்ய அது வழிவிடும்.

நிலையான, நீடித்த அரிசி வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருப்பதாக இரு அமைச்சுகளின் கூட்டறிக்கை குறிப்பிட்டது. தேவையற்ற வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது உட்பட உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்றும் அறிக்கை சுட்டியது.

சிங்கப்பூர் அத்தகைய உடன்பாட்டைப் பங்காளித்துவ நாடு ஒன்றுடன் செய்துகொள்வது இதுவே முதன்முறை என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ கூறினார்.

சிங்கப்பூர் அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் வியட்னாமும் ஒன்று.

“சிங்கப்பூர் அதன் உணவுத் தேவையில் 90 விழுக்காட்டுக்கும் மேல் இறக்குமதி செய்கிறது. உலகளாவிய உணவு விநியோக இடையூறுகளிலிருந்து அது தப்பமுடியாது. எனவே சிங்கப்பூருக்கு அரிசி தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, அனைத்துலக, வட்டார அளவில் பங்காளித்துவ உடன்பாடுகளைச் செய்துகொள்வது அவசியம்,” என்றார் திருவாட்டி ஃபூ.

வியட்னாமின் முன்னணி வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றார் திரு டியென். அத்துடன் சிங்கப்பூர் முக்கியமானதொரு சந்தை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்கும் இடையில் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் புதிய உடன்பாடு முக்கியப் படியாய் அமைந்திருப்பதாகச் சொன்னார் வியட்னாமிய அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்