சிங்கப்பூர் ஆயுதப் படையில் கூடுதலான தொழில்நுட்பப் பயன்பாடு

2 mins read
fd9b4978-10ef-41b4-995a-a5de74983181
முன்னேறி வரும் உலகத்தில் தற்போது அடிப்படை ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து வீரர்களும் தங்கள் திறன்களை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கடந்த கால அடிப்படை ராணுவப் பயிற்சியில் வீரர்களுக்கு ஒரு துப்பாக்கி மட்டும் எவ்வாறு இயக்குவது என்று கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் முன்னேறி வரும் உலகத்தில் தற்போது அடிப்படை ராணுவப் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து வீரர்களும் தங்கள் திறன்களை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தெக்­கோங் தீவில் உள்ள சிங்கப்பூர் அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்திற்கு வருகை புரிந்த திரு சான், ஆயுதப்படையின் ஆளில்லா வானூர்திகள் (ட்ரோன்) உட்பட அடிப்படை ராணுவப் பயிற்சியில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கண்டார்.

புதிய அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சிங்கப்பூர் ஆயுதப்படையின் அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்திற்கு திரு சான் முதல் முறையாக வருகை புரிந்தார்.

“அடிப்படை ராணுவப் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து வீரர்களும் ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் கற்றுக்கொள்வார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தைத் தற்போது கற்றுக்கொள்ளும் வீரர்கள் கடந்த ஜூலை மாதம் தங்கள் அடிப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்கினார்கள்.

அவர்களில் தற்போது ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொண்டு வரும் வீரர் உதயக்குமார், 21, ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தை இயக்குவது உண்மையில் எளிதானது என்று தெரிவித்தார்.

“உயிர்களைப் பணயம் வைக்காமல் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆளில்லா வானூர்திகள் மிக உதவியாக இருக்கும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மேலும், பயிற்சி பெறும் ஒவ்வொரு வீரருக்கும் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் கைக்கடிகார கருவி, உடற்பயிற்சியிலிருந்து ஏற்படும் காயங்களுக்கு உடற்பிடிப்பு அளிக்கும் மையம் ஒன்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.

கடந்த காலத்தில் பெருமளவில் பயிற்சி அளிக்கப்பட்டதை விட, தற்போது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் விதம் மிகவும் தனிப் பயன்பாடாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“ஒரு வீரனின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று இந்தத் தரவுகள் சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு தெரிவிக்கும்,” என்றார் அவர்.

இருப்பினும், ஆயுதப் படைப் பற்றிய சில நுணுக்கங்கள் மாறவில்லை, மேலும் மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சவாலான சூழ்நிலைகளில் தங்களை மீட்டுக் கொள்ளும் திறன், அவற்றைச் சமாளிக்க ஒரு குழுவாகப் பணியாற்றுதல் போன்ற அடிப்படைத் திறன்கள் தொடர்ந்து முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்