ஆஸ்திரேலியாவிலுள்ள ஷோல்வாட்டர் பே பயிற்சித்தளத்தின் பரந்த நிலப்பரப்பில் சிங்கப்பூர் ஆயுதப் படை, அதன் ஒருங்கிணைந்த தற்காப்புத் திறன்களை இவ்வாண்டு நடைபெற்ற ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் முழுவீச்சாக வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டின் பயிற்சியில், சிங்கப்பூர் ராணுவம், குடியரசு ஆகாயப்படை, மின்னிலக்க, உளவுத்துறைப் படை உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒருமைப்பாட்டையும் ஒத்திசைவையும் வெளிப்படுத்திய மிகப் பெரிய ஒருங்கிணைந்த நேரடித் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
‘விரைவான தகவலறிதல், துல்லியமான தாக்குதல்’ (See Better, Shoot Faster) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருந்தது இந்தப் பயிற்சி.
பல்வேறு உணர்வுக்கருவிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து, தொடக்கம் முதல் முடிவுவரை (end-to-end) விரைவாகச் செயல்பட்டு, சரியான நேரத்தில் துல்லியமான தாக்குதலைச் செயல்படுத்தும் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
பயிற்சியின் முதல் கட்டத்தில், வி-15 மினி, ஆர்பிட்டர்-4 போன்ற ஆளில்லா வானூர்திகள் பயிற்சித்தளத்தையும், அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகளையும் கண்காணித்து, உடனடித் தகவல்களைத் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு (Command Post) அனுப்பின. இதனை மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் நிபுணர்கள் மேற்பார்வையிட்டனர்.
இதனையடுத்து, கட்டுப்பாட்டுத் தகவல் அமைப்பு (Command and Control Information System), ஆளில்லா வானூர்திகள், ரேடார்கள், தரைப்படைகள், தாக்குதல் தளங்களிலிருந்து வந்த தரவுகளைச் செயற்பாட்டுக்கு உதவும் தரவுகளாக மாற்றியது.
அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற சிங்கப்பூர் ராணுவத்திற்கும் சிங்கப்பூர் ஆகாயப்படைக்கும் இடையேயான ஒருங்கிணைந்த நேரடிச் சுடுதல், சிறப்பம்சமாக அமைந்தது.
இதில், ஏஎச்-64டி அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுடனும் எஃப்-16 போர் விமானங்களுடனும் இணைந்து, அதிநவீன பீரங்கி ஏவுகணைத் திட்டமான ‘ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்’ முதல்முறையாக ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியின் நேரடிச் சுடுதலில் பங்கேற்றது.
தொடர்புடைய செய்திகள்
சமிக்ஞை அடையாளம் காணப்பட்டவுடன், ‘ஹைமார்ஸ்’ மற்றும் இரண்டு ஆகாயப்படை வாகனங்களும் உடனடியாகச் செயல்பட்டு, அதை வெடி குண்டுகளுடன் தாக்கின.
தேசிய சேவையாளர்களின் ‘ஹைமார்ஸ்’ ஏவுகணைக் குழுத் தளபதியான இரண்டாம் சார்ஜண்ட் சுரேந்திரராஜ் சைலேண்டரா, 20, இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அனுபவம் தனக்குத் தொழில்ரீதியான மைல்கல்லாகவும், தனிப்பட்ட சாதனையாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
தனது குழுவின் ஆயத்தப் பணிகளையும் நேரடிச் சுடுதல் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்ட திரு சைலேண்டரா, ஒவ்வொரு நடைமுறையும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதையும் உறுதியாகச் சரிபார்த்தார்.
“நாங்கள் உண்மையான வெடிகுண்டுகளைக் கையாளும்போது, பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
“துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் பயிற்சிகளின்வழி குழுவை வழிநடத்துவதும், அனைத்து நடைமுறைகளும் திட்டமிட்டபடி குறைபாடின்றி நடப்பதை உறுதி செய்வதும் என் பொறுப்புகளில் மிக முக்கியமான பகுதியாகும்,” என்று திரு சைலேண்டரா சொன்னார்.
சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறை காரணமாக, அங்குப் பயிற்சி செய்வதைவிட, ஆஸ்திரேலியாவிலுள்ள அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் நிலவசதி மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், இங்கு இவ்வளவு பெரிய செயல்பாட்டுப் பகுதி இருப்பதால் உண்மையான கள நடவடிக்கைகளில் நாம் எவ்வாறு செயல்படுவோம் என்பதை மிகவும் உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கிறது.
“மேலும், இங்குள்ள நிலப்பரப்பு மிகவும் மாறுபட்டது. இரவு குளிராகவும், பகல் வறண்டதாகவும், சாலைகள் புழுதியுடனும் உள்ளன,” என்று திரு சைலேண்டரா கூறினார்.
ஆகாயப்படையின் வான்வழிப் பட உளவுத்துறை நிபுணரும் (Air Imagery Intelligence Expert from the RSAF) இரண்டாம் ராணுவ நிபுணருமான சாம்ராஜ், 32, இந்தப் பயிற்சிக்காகப் பின்னணியிலிருந்து பணிபுரிந்த முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார்.
தரைப்படைக்கும் ஆகாயப்படைக்கும் இடையே பாலமாகச் செயல்படும் இவரது குழு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான நேரடித் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதை பொறுப்பாக கொண்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை ஒரு முழுமையாக ஒருங்கிணைந்த படையாக செயல்படுவதைக் காண ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சி அவருக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியதாக திரு சாம்ராஜ் குறிப்பிட்டார்.
“ பறக்கும் வழிகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும், அந்த உள்ளீடுகள் போர் முடிவுகளாக எவ்வாறு மாறுகின்றன என்பதை உடனடியாகக் காணவும் எங்களுக்கு இங்குள்ள பரந்த இடம் உதவியது.
“நாங்கள் உருவாக்கிய உளவுத் தகவல்கள் தரைப்படை, ஆகாயப்படையின் செயல்பாட்டு திறன்களுக்கு நேரடியாக ஆதரவளிப்பதைக் கண்டு நிறைவடைகிறோம்,” என்றார் அவர்.
சிக்கலான, துடிப்புமிக்கச் சூழல்களில் துல்லியத்திற்கும், பாதுகாப்புக்கும் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்பதை தம் அனுபவம் வழி உணர்ந்ததாகத் திரு சாம்ராஜ் குறிப்பிட்டார் .
செயல்பாட்டு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் மின்னிலக்க கருவிகள் முக்கியப் பங்காற்றின.
மின்னிலக்க செயல்பாட்டுத் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், இந்த ஒருங்கிணைந்த நேரடிச் சுடுதல் பயிற்சியின் செயல்பாடுகளுக்கு உதவ புதிய உளவுத்துறைப் பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கியிருந்தனர்.
இதன்வழி, ஆய்வாளர்கள் அதிக அளவிலான தகவல்களை விரைவாக அணுகவும் அதற்கேற்ப செயல்படவும் முடிந்தது.
மின்னிலக்க செயல்பாடுகள்-தொழில்நுட்பம் நிலையத்தின் (டிஓடிசி) தற்காப்பு நிர்வாக அதிகாரி (டிஎக்ஸ்ஓ) பொறியாளர்களில் ஒருவரான திரு த. தாரணிதரன், 25, இந்தப் பயிற்சியின் மூலம் முக்கியமான அனுபவத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஒரு மேசையில் அமர்ந்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவற்றை, நேரடி ஒருங்கிணைந்த ராணுவச் செயல்பாட்டுகளில் மென்பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் களத்தில் கண்கூடாகப் பார்த்ததாக சொன்னார். உடனடியாக தங்கள் மென்பொருளை மேம்படுத்தவும் இது உதவியதாக அவர் சொன்னார்.
‘எக்சர்சைஸ் வாலபி’யில் கிடைத்த இந்த நேரடி அனுபவம், தன்னைப் போன்ற பொதுத்துறைத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பெருமையையும், அர்த்தத்தையும் அளிப்பதாக திரு தரணிதரன் குறிப்பிட்டார்.
ஏனெனில், அவர்களது பங்களிப்புகள் நாட்டின் செயல்பாட்டுத் தயார்நிலையையும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் திறனையும் நேரடியாக மேம்படுத்துகின்றன என்பதை உணர முடிந்ததாக அவர் கூறினார்.


