ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ‘வாலபி’ ராணுவப் பயிற்சியில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் காலாட்படைப் பயிற்சிப் பள்ளியின் மறைந்திருந்து இலக்கைச் சுடும் வல்லுநர் பிரிவில் (Sniper Wing) மூத்த பயிற்றுநராக 27 வயது ‘மாஸ்டர் சார்ஜென்ட்’ சின் ஷி லீ (Chin Shi Lee) பங்கேற்று வருகிறார்.
2019ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ராணுவத்தில் இணைந்த இவர், கடந்த 7 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார். இதன் மூலம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் குறிசுடும் வல்லுநர் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் (First Female Sniper) என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவதோடு, அப்பிரிவின் மூத்த பயிற்றுநராகவும் கடந்த ஆண்டிலிருந்து அவர் பணியாற்றி வருகிறார்.
‘வாலபி’ ராணுவப் பயிற்சியில் அவர் கலந்துகொள்வது இதுவே முதன்முறை.
சிங்கப்பூரைவிடப் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ஆஸ்திரேலியப் பயிற்சித் திடல், முற்றிலும் மாறுபட்ட சவால்களை வழங்குவதாக சின் ஷி லீ தெரிவித்தார்.
அங்கு 300 மீட்டர் முதல் 1,000 மீட்டர் வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் நேரடிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘டிஆர்ஜி 22’, ‘எம்110’ ஆகிய ஆயுதங்களுடன் இயந்திரங்களைத் தாக்கக்கூடிய ‘ஏஎக்ஸ்50’ துப்பாக்கி போன்ற புதிய வகைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இலக்குகளைக் கணிக்கும் திறன்களையும், உளவு சேகரிக்கும் நுட்பங்களையும் வீரர்கள் அங்கு மேற்கொள்கின்றனர்.
“குறிசுடும் வல்லுநரின் பணி என்பது இலக்கைச் சுடுவது மட்டுமே என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், துல்லியமாகச் சுடுவதைத் தாண்டி, எதிரிகளின் இருப்பிடங்களைக் கண்டறிவது, உளவுத்துறைக்காகத் தகவல்களைச் சேகரிப்பது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான கள நிலவரங்களை வழங்குவது ஆகிய முக்கியமான பணிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்,” என்கிறார் அவர்.
மேலும், தம் உடல் எடைக்கு 70 விழுக்காடு நிகரான எடையுள்ள கருவிகளைச் சுமந்துகொண்டு நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடிப்பதே இத்துறையின் மிகப்பெரிய சவாலாகும்.
“பெண் அல்லது ஆண் என்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே அளவிலான பயிற்சித் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன. திறமையும் விருப்பமும் உள்ள எவரும் ராணுவப் பணிகளில் சாதிக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார்.
இயற்கையோடு இயைந்த வெளிக்களச் செயல்பாடுகள், உடல்தகுதியை வலியுறுத்தும் பயிற்சிகளில் இருந்த பேரார்வமே ராணுவப் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தனக்கு உந்துதல் தந்ததாக சின் ஷி லீ கூறுகிறார்.
“எனது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இலக்குகளுக்கும் உகந்த தளமாகச் சிங்கப்பூர் ஆயுதப் படை அமைந்ததால், துணிச்சலுடன் இந்த ராணுவப் பயணத்தைத் தொடர்ந்தேன்,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
