தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா: கூடுதல் ராணுவத் தளப் பயன்பாடு குறித்துப் பரிசீலனை

2 mins read
f64d5404-bc0b-4400-aab1-9a6d64124e41
(இடமிருந்து) ஆஸ்திரேலியாவின் வர்த்தக, சுற்றுப்பயண, உள்துறைச் சிறப்பு அமைச்சர் டான் ஃபேரல், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், சிங்கப்பூர்த் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும், அவற்றின் ஆயுதப்படைகள் ஒன்று மற்றதன் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத் (CSP) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது. மேம்படுத்தப்பட்ட திட்டம் அடுத்த ஆண்டு கையொப்பம் ஆகும்.

14வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா கூட்டு அமைச்சர்நிலைக் குழுவின் (SAJMC) சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட அம்சங்களில் இதுவும் அடங்கும்.

இச்சந்திப்பு, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றது.

சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்திப்பை ஏற்றுநடத்தினர்.

இதில், ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்து அந்நாட்டுத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், வர்த்தக, சுற்றுப்பயணத் துறை அமைச்சர் டான் ஃபேரல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, நீண்டகால இருதரப்பு உறவுகளை அமைச்சர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

2015ஆம் ஆண்டு கையெழுத்தான சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத் திட்டத்தின் ஆறு துறைகளின்கீழும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் வரவேற்றனர்.

பொருளியலும் வர்த்தகமும், தற்காப்பும் பாதுகாப்பும், அறிவியலும் புத்தாக்கமும், மக்கள்நிலைத் தொடர்பு, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல் ஆகியவை அந்த ஆறு துறைகள்.

டாக்டர் இங்கும் அமைச்சர் மார்ல்சும் அடுத்த ஆண்டு கையொப்பமாகும் மேம்படுத்தப்பட்ட ‘சிஎஸ்பி’ (CSP 2.0) திட்டத்தின்கீழ் பெருமுன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர் என்று தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

2015ல் செய்துகொள்ளப்பட்ட ‘சிஎஸ்பி’ ஒப்பந்தம், சிங்கப்பூர் ஆயுதப்படையினரை, ஒவ்வோர் ஆண்டும் பெரிய எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலப் பயிற்சிக்கு அனுப்ப வகைசெய்தது.

‘ஷோல்வாட்டர் பே பயிற்சிப் பகுதி’யின் விரிவாக்கம், மேம்பாடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் ஆஸ்திரேலியாவின் கிரீன்வேலில் புதிய பயிற்சிப் பகுதியை அமைக்கவும் அது அனுமதித்தது.

சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மார்ல்ஸ், இரு நாட்டு ஆயுதப்படைகளும் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் அனுமதி வழங்குவதில் சந்திப்பு கவனம் செலுத்தியதாகக் கூறினார்.

ஏற்கெனவே பரந்துபட்ட, தனித்துவமான உறவு நிலவும் நிலையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றார் அவர்.

ஆஸ்திரேலியக் கடற்படைக் கப்பல்களும் விமானங்களும் சிங்கப்பூர்த் தளங்களுக்கு வழக்கமான இடைவெளியில் வந்துசெல்கின்றன. இருதரப்பு அல்லது பலதரப்புப் பயிற்சிகளில் அவை பங்கேற்கின்றன. இடைவழி நிறுத்தம், வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் வழக்கமான பயிற்சிகள் தொடர்பிலும் அவை இங்கு வருவதுண்டு.

சிங்கப்பூர் ஆயுதப்படை ஆஸ்திரேலியாவில் ‘ஷோல்வாட்டர் பே’ பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி அடுத்த ஆண்டுடன் 35 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன. இவ்வேளையில் கடந்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியா வழங்கிய ஆதரவுக்கு டாக்டர் இங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

‘சிஎஸ்பி 2.0’வில் குறிப்பிடப்படும் தற்காப்பு உறவு நடப்புக்கு வரும்போது அது சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் ஆக அணுக்கமான, ஆக மதிப்புள்ள தற்காப்புப் பங்காளித்துவ நாடுகளாக விளங்க உதவும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்