சாங்கி விமானப் போக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது எனவும் சாங்கியின் பயணிகளும் விமானப் போக்குவரத்தும் கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தின் எண்ணிக்கையை 2025ல் விஞ்சும் என்றும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையின் முன்னேற்றங்கள், முக்கிய நிலவரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சீ, விமானத்துறை மற்றும் கடல்துறை சார்ந்த வளர்ச்சி குறித்தும் பல்வேறு விவரங்களை வெளியிட்டார்.
கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டு, போக்குவரத்து முந்திய நிலைக்கு திரும்புகிறது என்று கூறினார் அமைச்சர் சீ.
“டிசம்பர் 2024 நிலவரப்படி நாம் 165 நகரங்களுடன் இணைப்பு கொண்டுள்ளோம். பிரசல்ஸ், பிலிப்பீன்சின் இலோஇலோ, வான்கூவர் உள்ளிட்ட 16 புதிய நகர்களுக்கான பயண இணைப்புகள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
“மேலும் சீனா, இந்தியா, தென்கிழக்காசியா உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் கூடுதல் சிறப்பான இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும்,” என்று விவரித்தார் அமைச்சர் சீ.
ஏர் கனடா, பீச் ஏவியேஷன், ஷாண்டோங் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 10 புதிய விமான நிறுவனங்களை வரவேற்றுள்ளதாக கூறிய திரு சீ, தற்போது சாங்கி ஏறத்தாழ 100 விமான நிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறது எனவும் வரும் ஆண்டுகளில் இதனை மேலும் அதிகரிக்க எண்ணம் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.
61.2 மில்லியன் பயணிகளை கையாண்ட சாங்கி விமான நிலையம்
சாங்கி விமான நிலையம் 2024 ஜனவரி முதல் நவம்பர் வரை 61.2 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளதாக விமான நிலையக் குழுமத்தின் அறிக்கை கூறியது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) வெளியான குழுமத்தின் அறிக்கையில் இத்தகவல் வெளியானது. இது, 2023ன் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, அக்டோபர் மற்றும் நவம்பர் 2024ல் பயணிகள் போக்குவரத்து, பெருந்தொற்றுக்கு முந்திய அளவைவிட அதிகம் என்றும் அறிக்கை சுட்டியது.
இந்த முன்னேற்றங்கள் ஆண்டு முழுவதும் காணப்பட்ட நிலையான வளர்ச்சி, சிங்கப்பூர், சீனாவுக்கு இடையிலான விசா இல்லாத அனுமதி ஏற்பாடு, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட சந்தைகளிலிருந்து வந்த நீடித்த பயணக் கோரிக்கைகளால் சாத்தியமானது என்றும் அறிக்கை விவரித்தது.
நாட்டின் ஆகாய, கடல் மார்க்க நிலையங்கள் சிங்கப்பூர் பொருளியலுக்கு தளவாடங்கள் பிரிவில் ஆதரவு வழங்குவதோடு நிறுத்திவிடாமல் உற்பத்தி, நிபுணத்துவச் சேவைகள், நிதி உள்ளிட்ட மற்ற பல துறைகளிலும் ஆதரவளித்து முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
“இதன்மூலம் நாடு அடையும் பொருளியல் வளர்ச்சி, நம் ஊழியர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அதிக சம்பளம், மேம்பட்ட வாழ்க்கைத்தொழில் தெரிவுகள் உள்ளிட்ட அனுகூலங்களை வழங்கும்,” என்று அமைச்சர் சீ கூறினார்.