பொருளியல் மந்தத்தையும் சிங்கப்பூர் வங்கிகளால் சமாளிக்க முடியும்: நாணய ஆணையம்

2 mins read
d1ede18e-d922-4881-ab50-68a53b613641
சிங்கப்பூரின் வங்கித் துறை தொடர்பான மதிப்பீட்டில் ஆணையம், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வங்கித் துறை எளிதில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இங்குள்ள வங்கிகள் கடும் அதிர்ச்சிகளைத் தாங்கும் அளவுக்குப் போதிய மூலதன ஆதரவைப் பெற்றிருப்பதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் முக்கியமான வங்கிகளிடம் ஆணையம் சோதனை நடத்தியது. உத்தேச மந்தநிலையைச் சந்திக்கும் அளவுக்கு அவை சிறந்த நிலையில் இருப்பது சோதனையில் தெரியவந்தது. உலகளாவிய பொருளியல் மந்தநிலை, நெடுங்காலம் நீடிக்கக்கூடிய கடுமையான நிதிச் சிக்கல் முதலியவை அவற்றுள் சில. வங்கிகளிடம் அதிர்ச்சிகளைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு வலுவான மூலதன ஆதரவு இருப்பதும் தெரியவந்தது.

உள்நாட்டின் மூன்று வங்கிகளான டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவையும் சிட்டிபேங்க், மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், எச்எஸ்பிசி முதலியவையும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

உள்நாட்டில் நிறுவப்பட்ட முக்கிய வங்கிகள், மற்றச் சாதாரண வங்கிகளைக் காட்டிலும் உயர்நிலை மூலதனத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இவ்வேளையில், நிதி நிலைத்தன்மை தொடர்பான ஆபத்துகள் தொடர்ந்து கூடுதலாய் இருப்பதாக நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பொருளியல், எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் மீள்திறனுடன் இருப்பதாக அது சொன்னது. முதலீடு செய்வது குறித்த அறிகுறிகள் வலுவாய் இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

ஆணையம் புதன்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட நிதி நிலைத்தன்மை மறுஆய்வில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகில் அரசியல் ஆபத்துகளும் வர்த்தகக் கொள்கைகளின் நிச்சயமற்ற நிலையும் ஓராண்டுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமிருப்பதாகச் சொல்லப்பட்டது.

வர்த்தகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறைக்கு வெளியே முதலீடு செய்வதில் எச்சரிக்கையோடு இருக்கும் போக்கும் நீடிக்கும் என்று கூறப்பட்டது.

வலுவான நிதி நிலைக்கு இடையே சிங்கப்பூரின் நிறுவனங்கள், குடும்பங்கள், நிதித் துறை முதலியவை மீள்திறனுடன் இருப்பதாக இணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் வங்கித் துறை தொடர்பான மதிப்பீட்டில் ஆணையம், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வங்கித் துறை எளிதில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்