தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருளுக்கு எதிரான புதிய கூட்டணியில் சிங்கப்பூர்

2 mins read
56db38df-89fa-4359-8fb2-fccb34a5f2b9
போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பசிபிக் மாநாட்டில் பேசும் திரு சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை எதிர்கொள்ளும் புதிய அரசாங்க சார்பற்ற அமைப்புகளைக் கொண்டுள்ள கூட்டணியில் சிங்கப்பூர் இடம்பெறுகிறது.

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பசிபிக் கூட்டமைப்பு (ஏபிசிடி) என்றழைக்கப்படும் இக்குழு, போதைப்பொருள் இல்லாத சமூகங்களை உருவாக்குவது, போதைப்பொருளுக்கு உள்ள தேவையைக் குறைப்பது ஆகிய முயற்சிகளுக்குக் குரல் கொடுக்கும். இக்குழுவில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

உள்துறை அமைச்சர் கா. சண்முகம், வியாழக்கிழமை (மே 15) இந்தக் கூட்டணி தொடங்கப்படுவதை அறிவித்தார். இக்கூட்டணியில் சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹேவ்லாக் ரோட்டில் உள்ள ஃபுராமா ரிவர்ஃபிரன்ட் ஹோட்டலில் நடக்கும் 2025க்கான போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பசிபிக் மாநாட்டில் திரு சண்முகத்துடன் உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் முகம்மது ஃபை‌ஷல் இப்ராகிமும் கலந்துகொண்டார்.

300க்கும் அதிகமான கூட்டணி உறுப்பினர்கள், பங்காளி அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (மே 17) வரை நடைபெறும்.

ஏபிசிடி, கூட்டுத் திட்டங்களின் மூலம் வட்டார அளவிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று திரு சண்முகம் கூறினார். அதோடு, அதிகமாக தலைதூக்கும், அதிகக் கட்டுப்பாடற்ற கொள்கைகள், போதைப்பொருள் தொடர்பிலான பொய்த் தகவல்கள் ஆகியவற்றுக்கு எதிராக ஏபிசிடி குரல் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஃபென்டனில் போன்ற செயற்கை போதைப்பொருள்களால் வரும் அபாயம் அதிகரித்துவரும் வேளையில் திரு சண்முகம் இதனை அறிவித்தார்.

மலேசியா, கடந்த மார்ச் மாதம் அதன் சாக்கடை முறைகளில் ஓப்பியோய்ட் (opioid) போதைப்பொருள் துளிகள் இருந்ததைக் கண்டறிந்தது என்று திரு சண்முகம் தெரிவித்தார். அப்படியென்றால் அந்நாட்டினர் அந்த போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்திவரக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

“ஃபென்டனில், ஹெராயினைவிட 50 மடங்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதன் பின்விளைவுகள் கொடூரமாக இருந்துவந்துள்ளன.

“2018லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் ஃபென்டனிலை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 250,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் அதனால் உயிரிழந்தனர். 2022ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் தினமும் கிட்டத்தட்ட 200 பேர் அதற்குப் பலியாயினர்,” என்று அமைச்சர் சண்முகம் விவரித்தார்.

இரண்டாம் உலகப் போர் உட்பட அமெரிக்கா ஈடுபட்ட எல்லாப் போர்களிலும் மாண்ட அந்நாட்டினரைக் காட்டிலும் ஃபென்டனிலை அளவுக்கதிகமாக உட்கொண்டு உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்