ஆசியாவிலேயே வெளிநாட்டினருக்குச் சிறந்த வாழ்விடமாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சிங்கப்பூர்

1 mins read
5cd04027-1052-4b9e-84a8-57a5bd751b88
வெளிநாட்டினருக்குச் சிறந்த வாழ்விடம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் சிங்கப்பூர் 29 வது இடத்தில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய அளவில் வெளிநாட்டினர் குடும்பத்தோடு வசிக்கவும் வேலை செய்யவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தேர்வாகியுள்ளது.

அனைத்துலக ஆலோசனை நிறுவனமான மெர்சர் நடத்திய வெளிநாட்டினருக்கான வாழ்க்கைத்தரம் 2023 எனும் கருத்தாய்வில் அது தெரியவந்தது.

உலக அளவில் சிங்கப்பூர் 29ஆம் இடத்தில் உள்ளது. இவ்விடத்தை அது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுடன் பகிர்ந்துகொள்கிறது.

கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட 241 நகரங்கள் அடங்கிய பட்டியலில் ஹாங்காங் 77வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

உலகளவில் உள்ள 450க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலவும் வாழ்க்கைச்சூழல்களை மெர்சர் நிறுவனம் ஆய்வு செய்தது. அரசியல், சமூகச் சூழல், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, வீட்டுவசதி உள்ளிட்ட 39 அம்சங்களின் அடிப்படையில் இந்தக் கருத்து கணிப்பு நடந்ததாகக் கூறப்பட்டது.

இதற்கு முன்னர், இந்தப் பட்டியலை அந்நிறுவனம் கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய காலகட்டமான 2019ஆம் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

அவ்வாண்டும் சிங்கப்பூர் ஆசியாவில் முதலிடத்தில் இருந்தது. அதற்கு முன்னர் ஐந்து ஆண்டுகளாக அது அவ்விடத்தை தக்க வைத்திருந்தது.

பட்டியலில் உலக அளவில் வியன்னா முதலிடத்திலும் சூரிச், ஆக்லாந்து ஆகியவை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்