சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2026 குறித்து 1.11.2026 தமிழ் முரசில் திரு நா.ஆண்டியப்பன் தெரிவித்த கருத்துகளுக்கு நன்றி கூறுகிறோம். சிங்கப்பூர் இலக்கியப் பரிசை ஏற்பாடு செய்யும் அமைப்பாக, எழுத்தாளர்களின் அனுபவங்கள், புத்தாக்கப் படைப்புகளின் பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில், நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இலக்கியச் சிறப்பை அங்கீகரிப்பதில் சிங்கப்பூர்ப் புத்தக மன்றம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
நடுவர்களின் மதிப்பீட்டு நடைமுறையின் நேர்மையை மன்றம் மிக முக்கியமானதாகக் கருதுகிறது. அந்த மதிப்பீட்டு நடைமுறை தீவிரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதை அது உறுதிசெய்கிறது.
தகுதிவாய்ந்த அனைத்துப் படைப்புகளும் நடுவர்களின் மதிப்பீட்டிற்கும் பரிசீலனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தகுதி வரம்புகள் எங்களின் இணையத்தளத்தில் (Rules and Regulations பிரிவின் கீழ்: https://www.bookcouncil.sg/awards/slp-2026) வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அனைவரும் படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக அவற்றை அணுகி, முழுமையாகப் படித்துப் பார்க்க முடிந்தது.
முக்கியமாக, ‘விருதுப் பிரிவு’ என்பதன்கீழ் உள்ள உரைநடைப் பிரிவுக்கான அளவுகோல்களை விவரிக்கும் 1(e) விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“உரைநடைப் பிரிவு என்பது புனைகதை, புத்தாக்கப் புனைகதையல்லாத படைப்புகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. புனைகதை என்பது சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவை. புத்தாக்கப் புனைகதையல்லாத படைப்பானது உண்மையான நிகழ்வுகள், மனிதர்கள் அல்லது கருத்துகளைப் பற்றி கதை வடிவ உரையை உருவாக்க இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தும் எழுத்தைக் குறிக்கிறது.
இலக்கிய விமர்சனம், வாழ்க்கை வரலாறு, நினைவுக் குறிப்பு, தனிமனிதர் கட்டுரை, பயணக் கட்டுரை முதலியவை இந்த வகைக்குள் அடங்கும் (இவை மட்டுமே என்ற வரம்பின்றி). சமையல் புத்தகங்கள், சுய உதவிக் கையேடுகள், பயண வழிகாட்டி நெறிமுறைகள், கல்விசார் ஆய்வுகள், வணிகப் புத்தகங்கள், வருணனை அல்லது பாடப்புத்தகங்களை நாங்கள் ஏற்பதில்லை. இப்படைப்பு, பொது வாசகர்கள் படிக்கும் வகையில் இருக்க வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற அல்லது கல்விசார் வாசகர்களுக்கானதாக மட்டுமே அமைந்திருக்கக் கூடாது. இளம் பருவத்தினருக்கான படைப்புகள் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2026ல் சமர்ப்பிக்கத் தகுதியானவை.”
தீர்ப்பு வழங்கும் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் நடுநிலைத் தன்மையையும் உறுதி செய்வதற்காக அது ரகசியமாக வைக்கப்படுகிறது. நடுவர்களின் கலந்துரையாடல்கள் பற்றியோ, எந்தவொரு தனிப்பட்ட படைப்பைப் பற்றியோ எங்களால் தகவல்களைப் பகிரமுடியாது என்றாலும், சிறந்த படைப்புகளைத் தெரிவுசெய்வதில் எங்கள் மதிப்பிற்குரிய, அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்; அவர்களின் இறுதி முடிவுகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.
விருதுக் கட்டமைப்பு, பிரிவுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் பற்றியும் ஏற்கெனவே ஊடகங்களிலும் பொதுக் கருத்தரங்குகளிலும் விளக்கியுள்ளோம். கூடுதல் விவரங்களுக்கு எங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
திரு ஆண்டியப்பன் அவர்களின் கருத்துகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். மேலும் இத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் பாராட்டுகிறோம். சிங்கப்பூரில் தமிழ் இலக்கியக் கலைகளை மேலும் ஊக்குவிப்பதற்கு அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
வில்லியம் புவான்
நிர்வாக இயக்குநர்
சிங்கப்பூர் புத்தக மன்றம்
